மலையாள நடிகை பாலியல் சீண்டல் செய்யப்பட்ட விவகாரத்தில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

சமூகத்தில் பிரபலமாகவும், பெரிய அளவில் வளர்ந்த அல்லது வளர்துவிட்ட பெண்கள் பொது வெளியில் வரும் போது, சில நேரங்களில் சில தர்மசங்கடமான சூழலுக்குத் தள்ளப்பட்டு விடுகிறார்கள் என்பதற்கு, கேரளாவில் நடைபெற்ற இந்த சம்பவமே ஒரு சாட்சியாக அமைந்திருக்கிறது.

அதாவது, கடந்த 17 ஆம் தேதி வியாழக் கிழமை கேராளவைச் சேர்ந்த பிரபல மலையாள இளம் நடிகை ஒருவர், தனது தாயார், சகோதரி, சகோதரன் ஆகியோருடன் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் அமைந்துள்ள ஒரு வணிக வளாகத்திற்குச் சென்று உள்ளார். அப்போது, அந்த நடிகையை அடையாளம் கண்டுகொண்ட இளைஞர் ஒருவர், அந்த நடிகையின் அருகில் வந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளம் நடிகை, சத்தம் போட்டு ஆவேசமாகத் திட்டினார். இதனால், அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த நடிகை, தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். அதில், “எனது குடும்பத்தினருடன் நான் வணிக வளாகத்தில் இருந்த போது, 2 இளைஞர்கள் என்னைக் கடந்துசென்றார்கள். அப்போது, அந்த இரு இளைஞனில் ஒருவன், என் மீது கை வைத்து தவறாக நடந்து கொண்டார். 

அத்துடன், என்னையும் எனது சகோதரியையும் அவர் பாலியல் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கினார்” என்று, பகிரங்கமாக அந்த நடிகை குற்றம் சாட்டியிருந்தார். 

இந்த வீடியோ இணையத்தில் பெரும் வைரலானது. இந்த விசயம் கேரளா முழுவதும் பரவிய நிலையில், பெண் சுதந்திரம் பற்றி கேள்வியும் எழுந்தது.

இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக அந்த மாநில பெண்கள் ஆணையம், தாமாக முன் வந்து இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட நடிகையை அழைத்து என்ன நடந்தது என்று விசாரணை நடத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, குறிப்பிட்ட அந்த வணிக வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமராவையும் போலீசார் ஆய்வு செய்தனர். அதன் படி, அந்த இளம் நடிகையிடம் பாலியல் அத்து மீறிலில் ஈடுபட்ட அந்த நபர் அடையாளம் காணப்பட்டார். 

இதனையடுத்து, இளம் நடிகையிடம் தவறாக நடந்துகொண்ட இருவரையும் கேரள காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இருவர் மீதும் இந்தியத் தண்டனைச் சட்டம் 354 பிரிவின் படி,  பெண்ணின் மாண்பிற்குக் குந்தகம் விளைவித்தல் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும், போலீசார் தங்கள் தயாரித்த அறிக்கையைப் பதிவு செய்து, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இருவரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அத்துடன், அந்த இளம் நடிகையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.