கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜகமே தந்திரம். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

பெரும் பொருட்செலவில் உருவான இந்தப் படம் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கும் முன்பே தயாராகிவிட்டது. கரோனா ஊரடங்கினால் தள்ளி வைக்கப்பட்டது. திரையரங்க வெளியீட்டுக்காகவே ஓடிடி தளத்தில் வெளியாகாமல் இருந்தது. திடீரென்று ஜகமே தந்திரம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என்று தகவல் பரவியது.

இது தொடர்பாகப் படக்குழுவினர் யாருமே எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. இதனால் ஓடிடி செய்தி உண்மையாக இருக்கும் எனப் பலரும் நம்பத் தொடங்கினார்கள். தனுஷ் ரசிகர்களோ, திரையரங்குகளில் வெளியிடும்படி தயாரிப்பு நிறுவனத்துக்கு வேண்டுகோள் விடுத்து ட்வீட் செய்து வருகிறார்கள். ஓடிடி வெளியீடு தொடர்பாக தனுஷ் மற்றும் தயாரிப்பாளர் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜகமே தந்திரம் வெளியீடு தொடர்பாக தனுஷ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், திரைப்பட ரசிகர்கள் மற்றும் பெரும்பாலான எனது ரசிகர்களைப் போல நானும் ஜகமே தந்திரம் திரையரங்கில் வெளியாகும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.

லண்டன், சென்னை, மதுரை போன்ற பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. தனுஷ் கிடா மீசையில் சுருளி எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார். பிளாஷ்பாக் காட்சியில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சஞ்சனா நட்ராஜன் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.