“மனைவியிடம் வரதட்சணை கேட்பது துன்புறுத்தல் கிடையாது” என்று, கருத்து கூறி மறுபடியும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் மும்பையைச் சேர்ந்த அதே பெண் நீதிபதி. 

சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதற்காகக் குற்றவாளி சதிஷ்க்கு, குழந்தைகள் பாலியல் குற்றத்தடுப்பு சட்டத்தின் 7 வது மற்றும் 8 வது பிரிவின் 
கீழ் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நாக்பூர் கீழமை நீதிமன்றம் வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றவாளி சதீஷின் தரப்பினர், மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த பெண் நீதிபதி புஸ்பா கனடிவாலா, “இந்த வழக்கில் சிறுமி உட்பட மற்ற அனைவரின் வாக்கு மூலத்திலும் எந்த விதமான முரண்பாடுகளும் இல்லை. ஆனால், இது குழந்தைகள் பாலியல் குற்றத் தடுப்புச் சட்டத்தின் 7 வது பிரிவின் கீழ் குற்றமாக வராது என்றும், அதற்கு காரணம், சட்டப்பிரிவு 7 ன் கீழ் சிறுவர்களின் தோல் மீது தோல்பட்டு செய்யப்படும் தாக்குதல் தான் குற்றம்” என்றும், அவர் பரபரப்பு தீர்ப்பு அளித்தார்.

குறிப்பாக, “அணிந்திருக்கும் ஆடைக்கு மேல் பிறப்புறுப்பு, மார்பகம் போன்றவற்றைக் கையால் தொட்டுத் துன்புறுத்துவது பாலியல் வன்கொடுமை கிடையாது” என்று, தீர்ப்பில் அந்த நீதிபதி தெரிவித்து இருந்தார். சிறுமிக்கு நடந்த சம்பவத்தை பாலியல் தாக்குதலாகத் தான் கருத வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் வாதிட்டும் அதை, அந்த அந்த நீதிபதி ஏற்கவில்லை. இது பெரும் விவாத பொருளாக மாறியது. உச்ச நீதிமன்றம் இத்தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்தது.

அதன் தொடர்ச்சியாக அடுத்த சில நாட்களில் “சிறார்களின் பேண்ட் ஜிப்பை கழற்றுவது பாலியல் வன்முறை அல்ல” என்று, மும்பை உயர் நீதிமன்றத்தில், அதே பெண் நீதிபதி கருத்து கூறி மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். 

இதனால், பாலியல் வழக்குகளில் தொடர்ச்சியாக சர்ச்சைக்குறிய வகையில், தீர்ப்பு வழங்கியதன் எதிரொலியாக, பெண் நீதிபதியை நிரந்தரமாக்கும் பரிந்துரையை உச்ச நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், அதன் தொடர்ச்சியாக, “மனைவியிடம் வரதட்சணை கேட்பது துன்புறுத்தல் கிடையாது” என்று, கருத்து கூறி மறுபடியும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் மும்பையைச் சேர்ந்த அதே பெண் நீதிபதி. 

அதாவது, பிரசாந்த் ஜாரே என்பவரை திருமணம் செய்து கொண்ட இளம் பெண் ஒருவரை, “அவரது கணவரும், மாமியாரும் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதன் காரணமாக, கடந்த 2004 ஆம் ஆண்டு அந்த பெண் தற்கொலை செய்து கொண்டதாக” கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், கணவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. 

இந்த தண்டனையை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் அந்த கணவர், வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கானது, தொடர்ச்சியாக பாலியல் வழக்குகளில் சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கிய நீதிபதி புஷ்பா கனேதிவாலா முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது, வழக்கை விசாரித்த அந்த பெண் நீதிபதி, “ஐபிசி பிரிவு 498 A ன் படி, மனைவியிடம் பணம் கேட்பது, வரதட்சணை துன்புறுத்தல் ஆகாது” என்று,  பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வழங்கினார்.

“மனைவியிடம் கணவர் வரதட்சிணை கேட்பது துன்புறுத்தலாகாது” என்று, தற்போது அந்த பெண் நீதிபதி வழங்கி உள்ள தீர்ப்பு, மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ச்சியாக, இவரது தீர்ப்புகளுக்குக் கண்டனங்கள் எழுந்து வருவதால், இவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற குரலும் தற்போது ஒலிக்கத் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.