“கொரோனா 2 வது அலையில் இளைஞர்கள் ஏன் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்?” என்பது குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்து உள்ளனர்.

தமிழ்நாட்டில் பரவிக்கொண்டு இருக்கும் கொரோனாவின் 2 வது அலையால் மக்கள் அள்ளப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். 

கொரோனா பாதிப்பால் மக்கள் திண்டாடி வரும் அதே வேளையில், கொரோனாவின் 2 வது அலையால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கையை மீண்டும் முடக்கிப்போய் உள்ளது. அத்துடன், தற்போது புதிதாக உருமாறி இருக்கும் கொரோனா வைரசால், பெருந்தொற்றின் தீவிரம் முதல் அலையை விட மிக அதிகமாக இருப்பதால், இந்தியாவின் ஒட்டுமொத்த சுகாதாரத்துறை கட்டமைப்பே தற்போது முழுவதுமாக ஆட்டம் கண்டிருக்கிறது. அந்த அளவுக்கு கொரோனா பாதிப்பு மிக பெரிய அளவில் இருக்கிறது.

குறிப்பாக, இந்த கொரோனாவின் 2 வது அலையால் பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் உட்பட 45 வயதிற்குப்பட்டோர் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த மாதம் வரை சண்டிகரில் 21 வயது முதல் 30 வயது உடையவர்களில் அதிகமானோர் இந்த தொற்று நோயால் பாதிக்கப்பட்டதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் ரன்தீப் குலேரியா கூறுகையில், “டெல்லியில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் இளைஞர்களை அதிகம் பாதிக்கிறது” என்று கூறியுள்ளார்.

அத்துடன், “ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் புதிய வகை கொரோனா வைரஸ் வயது முதிர்ந்தவர்களைக் காட்டிலும்,  இளைஞர்களையே அதிகம் பாதித்து இருப்பதாகவும், இளைஞர்கள் மத்தியில் வேகமாகப் பரவி வருகிறது” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும், இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, “கொரோனா முதல் அலையை விட 2 வது அலையில் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை சராசரியாக 1 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து உள்ளதாக” தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.சி.எம்.ஆர் தலைவர் டாக்டர் பல்ராம் பார்கவா, “இளைஞர்கள் அதிகம் வெளியே சென்று வருவதால், அதிக பாதிக்கப்படுகிறார்கள் என்பதைத் தவிர, அவர்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் உருமாறிய வைரசின் தாக்கம் இருப்பதாக” கூறியுள்ளார்.

அதே போல், இது குறித்து கொலம்பியா ஆசியா மருத்துவமனையில் உள் மருத்துவம் மற்றும் தொற்று நோய் ஆலோசகராக உள்ள டாக்டர் மகேஷ்குமார் கூறும்போது, “கொரோனா தொற்று பரவல் விஷயத்தில், இளைஞர்கள் ஒரு மொபைல் குரூப் என்று சுட்டிக்காட்டி உள்ளார். 

“அதற்குக் காரணம், பரவும் ஹோஸ்ட்டை நோய்வாய்படுத்துவது அல்லது மரணம் ஏற்படுத்துவது வைரசின் நோக்கமாக இருப்பதில்லை என்றும், இதனால் தான் வாழ்வதற்கும், பெருகுவதற்கும் ஒரு ஆரோக்கியமான ஹோஸ்ட்களைத் தேடும் நிலை உள்ளதாகவும்” அவர் குறிப்பிட்டு உள்ளார்.

“இதன் காரணமாகவே, இளைஞர்களிடையே கொரோனாவின் தாக்கம் தற்போது அதிகமாக இருக்கிறது என்றும், அவை அறிகுறியின்றி இருக்கக் கூடும் என்பதால் இளைஞர்கள் வழியே பிறருக்குத் தொற்று நோயை பரவும் அபாயம் ஏற்படுகிறது” என்றும், விளக்கம் அளித்து உள்ளார்.

அதே போல், “கொரோனா அறிகுறியற்று தொற்றால் பாதிக்கப்படும் இளைஞர்களில், கணிசமான எண்ணிக்கையில் உள்ளவர்கள் 2 அல்லது அதற்கு மேற்பட்ட நோய்களை ஒரே நேரத்தில் கொண்டிருக்கும் சுகாதார நிலைமைகள் உள்ளவர்களாக இருக்கலாம்” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார்.

“எனினும், மூச்சுத்திணறல் மற்றும் ஆக்ஸிஜன் அளவு விரைவாகக் குறைவது உள்ளிட்ட பாதிப்புகளுடன் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கான காரணத்தை நாம் இன்னும் சரியாக அறியவில்லை” என்றும், அவர் வெளிப்படையாகவே கூறியுள்ளார்.
 
குறிப்பாக, “ பல இளைஞர்கள் தங்களுக்கு இன்னும் முதல் தடுப்பூசி அளவிலேயே காத்திருக்கிறார்கள் என்றும், மூன்றாவது தடுப்பூசி போட வேண்டும் என்று அரசு அறிவுறுத்துவதற்கு முன்னதாக 18 வயது முதல் 44 வயது வரை உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவது அவசியம்” என்றும், டாக்டர் சுரஞ்சித் சாட்டர்ஜி வலியுறுத்தி உள்ளார்.