தேர்தல் எதிரொலியாக “இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கப்படும்” என்று, மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7 அம்ச திட்டங்களை நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் இன்னும் 6 மாதத்திற்குள் நடைபெற இருக்கிறது. இதனால், தமிழகத்தின் பிராத கட்சிகள் எல்லாம் தங்களது தேர்தல் பரப்புரைகளைத் தொடங்கி உள்ளன.

அதன் படி, “சீரமைப்போம் தமிழகத்தை” என்ற வாசகத்தை முன்னிறுத்தி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் தற்போது ஈடுபட்டு வருகிறார்.

அதன் படி, காஞ்சிபுரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நடிகர் மல்ஹாசன், “தமிழ்நாட்டை சீரமைப்போம் என்பதில், பலவற்றைச் சீரமைக்க வேண்டும்” என்று, குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “அதில் பொருளாதார புரட்சியும் உள்ளடங்கும் என்றும், அதனால் 7 அம்ச திட்டங்களை அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் அறிவிக்கிறோம்” என்றும், கூறினார்.

அத்துடன், “மக்களுக்கு சென்றடைய வேண்டிய அரசு சேவைகள் அனைத்தும், அவர்களுக்குச் செய்யும் தானமாக இல்லாமல் மக்களின் உரிமையாக இருக்க 
வேண்டும்” என்று, வலியுறுத்தினார். 

அதன் தொடர்ச்சியாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஏழு அம்ச திட்டங்களை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். 

அதில், முதல் திட்டமாக..

- சேவை உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார். அதாவது, “மக்கள் எதற்கும் வரிசையில் நிற்காமல், அவர்களது உரிமைகளை அவர்களாகவே பெறுவதற்காக மக்களைத் தேடி அரசுத் திட்டங்கள் சென்றடையும் வகையில் சேவை உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும்” என்று, கூறினார்.

- 2 வதாக, மின்னணு இல்லங்களாக மாற்றுதல் திட்டத்தை அறிவித்தார். அதாவது, “குடிசை வீடுகள் முதல் அனைத்து வீடுகளுக்கும் மிக அதிவேக இண்டர்நெட் இணைப்புடன் கூடிய கணினி வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும். இதன் மூலம், ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களின் திறமையையும், தகுதியையும் கண்டறிந்து அவர்களை கல்வி, பொருளாதாரம் உட்பட அனைத்திலும் முன்னேற்றமடையச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், கூறினார்.

- 3 வதாக, நவீன தற்சார்பு கிராமங்களை உருவாக்குதல் திட்டத்தை அறிவித்தார். அதன்படி, “தமிழ்நாடு மக்கள் சாக்கடையோரங்களிலும், நதிக்கரையோரங்களிலும் அவதிப்பட்டுக்கொண்டு வசிப்பதைத் தடுக்கும் வகையில் தற்சார்பு கிராமங்கள் உருவாக்கப்படும். சுத்தத்தையும், சுகாதாரத்தையும் பேணிக்காக்கும் வகையில் இந்த நவீன கிராமங்கள் அமையும்” என்றும், அவர் தெரிவித்தார்.

- 4 வதாக, தொழில்களை அதிகளவில் உருவாக்கி பொருளாதாரத்தில் தொழில் புரட்சி ஏற்படுத்துதல் திட்டத்தைக் கூறினார். அதன் படி, “பெரு தொழிற்சாலைகள் பலவற்றை உருவாக்குவதை விட, ஒவ்வொரு வட்டாரம் வாரியாக ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு தொழில்களை உருவாக்கி இளைஞர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி அவர்களது பொருளாதாரத்தை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இளைஞர்களை முதலாளிகளாக மாற்ற முழு முயற்சி மேற்கொள்ளப்படும்” என்றும், அவர் குறிப்பிட்டார். 

- 5 வதாக, இல்லத்தரசிகளுக்கு அரசு ஊதியம் திட்டம் பற்றி அறிவித்தார். அதாவது, “வீடுகளில் இல்லத்தரசிகள் செய்யும் பணிகள் மதிப்பிடவே முடியாதவை. எனவே, அவர்களைப் பற்றிய கணக்கெடுத்து வேலை இல்லாமல் இருக்கும் அனைத்து இல்லத்தரசிகளுக்கும் அரசு ஊதியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்” என்றும், அவர் உறுதி அளித்தார்.

- 6 வதாக, துரித நிர்வாகம் பற்றி அறிவித்தார். அதன் படி, “சாதாரண பஞ்சாயத்து அலுவலகம் முதல் முதலமைச்சர் அலுவலகம் வரை, பேப்பர்களே இல்லாமல் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு உடனுக்குடன் அரசுக்கோப்புகள் நகரும் வகையில் துரித நிர்வாகம் அமைக்கப்படும். லஞ்ச ஒழிப்புத் துறையை மேம்படுத்தி லஞ்சமே இல்லாமல் இருக்கும் வகையில் கண்காணிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றும், கூறினார்.

- இறுதியாக 7 வது திட்டமாக, இயற்கை வேளாண்மையுடன் கூடிய பசுமைப் புரட்சியை உருவாக்குதல் திட்டத்தை அறிவித்தார். அதன்படி, “இயற்கை வேளாண்மைக்கு உத்வேகம் அளிக்கும் வகையிலும், சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் நோக்கிலும் பசுமைப் புரட்சி ஏற்படுத்தப்படும். இதற்கென தனியாக ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுச் செயல்படுத்தப்படும்” என்றும், கமல்ஹாசன் அறிவித்தார்.