தமிழ்நாட்டில் கொரோனா தொற்று சற்று வேகம் எடுத்து வரும் நிலையில், இன்னும் தீவிரமாக எடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.

தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் கொரோனா என்னும் கொடிய நோய் மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கி உள்ளது.

இதனால், இந்தியாவின் பிற மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பல்வேறு புதிய புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், கொரோனா பரவ வட மாநிலங்களில் மீண்டும் அதிகரித்து வருவதால், மத்திய அரசு அலுவலகங்கள் துணைச் செயலாளர் பதவிக்கு கீழ் உள்ள பணியாளர்களில் 50 சதவிகிதம் பேருடன் செயல்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.

அத்துடன், “எஞ்சி உள்ள 50 சதவிகிதம் பேர் வீடுகளிலிருந்தே பணிபுரிவார்கள்” என்றும் மத்திய அரசு அறிவித்து உள்ளது.

மேலும், “மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் அலுவலகத்திற்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்” உள்ளது. 

இவற்றுடன், “மத்திய அரசு அலுவலகங்களில் அதிக கூட்டத்தை தவிர்க்கும் விதமாக, மத்திய அரசு ஊழியர்கள் வெவ்வேறு நேரத்திற்கு அலுவலகத்திற்கு வரும் வகையிலான நடைமுறையை பின்பற்ற வேண்டும்” என்றும், மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில் தான், தமிழகத்தில் தற்போது தீவிரமாக பரவத் தொடங்கி இருக்கும் கொரோனா பரவலை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று மருத்துவத்துறைச் சேர்ந்த உயர் மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

அதாவது, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக தமிழக அரசு சார்பில் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது.

இப்படியாக, உருமாறிய மற்றும் புதிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் ஒமைக்ரான் வகைச் சேர்ந்த கொரோனாவும், தமிழகத்தில் சற்று  அதிகமாகவே தற்போது பரவி வருகிறது. 

இது வரை 121 பேருக்கு இந்த வகை கொரோனா கண்டறியப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இப்படி, தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நேரடி பள்ளி வகுப்புகள் தற்போது நிறுத்தப்பட்டு முதல்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

மேலும், கொரோனா பரவலை தடுக்க 15 வயதுக்கு மேற்பட சிறாருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளும் நேற்று முதல் தமிழகத்தில்  தொடங்கி உள்ளன. 

இவற்றுடன், தமிழகத்தில் நேற்றைய தினம் 1728 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், அதில் அதிக பட்சமாக சென்னையில் 876 பேருக்கும், செங்கல்பட்டில் 158 பேருக்கும், கோவையில் 105 பேருக்கும் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அத்துடன், தமிழ்நாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் 10 ஆயிரத்து 364 ஆக உயர்ந்து உள்ளது. 

இந்த நிலையில் தான், தமிழகத்தில் இன்னும் ஒரு வார காலத்திற்குள் பொங்கல் பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளதால் கொரோனா பரவல் இன்னும் அதிகரிக்கும் என்கிற அச்சமும், பயமும் எழுந்து உள்ளன.

இதன் காரணமாகவே, தமிழகத்தில் ஒமைக்ரான் என்னும் கொரோனா தொற்று பரவலை தடுக்க தற்போது உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மருத்துவத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

இதன் தொடர்ச்சியாகவே, தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுக்க மேலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்கிற தகவலும் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.