10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு நேரடி பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

board exams

சென்னை நடுக்குப்பத்தில் இல்லம் தேடி கல்வி மையத்தை பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று மாலை பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இல்லம் தேடி கல்வித்திட்டம் 46 ஆயிரம் மையங்களில் முதற்கட்டமாக தொடங்கி நடைபெற்று வந்தது. தற்போது இரண்டாம் கட்டமாக 34 ஆயிரம் மையங்களில் தொடங்கப்பட உள்ளது. அந்த வகையில் மொத்தம் 80 ஆயிரம் மையங்களில் இல்லம் தேடி கல்வித்திட்டம் செயல்படும்.

இந்நிலையில் நம்முடைய திட்டப் படி ஒரு லட்சத்து 70 ஆயிரம் மையங்கள் தேவை. இந்த இல்லம் தேடி கல்வித்திட்டத்தின் மூலம் இதுவரை 11 லட்சத்து 12 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.
மேலும் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். அதன்படி 10 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி சுகாதார துறை உள்ளாட்சி அமைப்புகளின் உதவிகளோடு முடிக்கப்படும்.

அதுமட்டுமில்லாமல் வாரியத்தின் பொதுத்தேர்வு என்பது மிகவும் அவசியம். கடந்த ஆண்டு பொதுத்தேர்வு நடத்த முடியாமல் போனது. ஆனால் இந்த ஆண்டு அதுபோல் இருக்காது. ஏனென்றால் பொதுத்தேர்வு எழுதும் 10 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி விரைவில் முடிவடைந்துவிடும். அவர்களுக்கான வகுப்புகளும் தொடர்ந்து நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. அதற்கான வாய்ப்பை முதலமைச்சரின் அனுமதி பெற்று ஏற்படுத்தித் தருவோம். அந்த வகையில் 10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என  பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.