துப்பாக்கிகுண்டு பாய்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்த நிலையில், புதுக்கோட்டை சிறுவன் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம் வழங்க வதாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

அதாவது, புதுக்கோட்டை நார்த்தாமலை அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு சொந்தமான துப்பாக்கி சூடு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. 

இங்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற துப்பாக்கி சூடு பயிற்சியின் போது, தவறுதலாக வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டு இருந்த புகழேந்தி என்ற சிறுவனின் தலையில் ஒரு குண்டு பாய்ந்து உள்ளது.

இதனையடுத்து, துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவன், புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், குண்டு பாய்ந்த சிறுவன் புகழேந்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

அதன் தொடர்ச்சியாக, புதுக்கோட்டை மருத்துவமனையில் இருந்து உயர் சிகிச்சைக்காக அந்த சிறுவன் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அதே நேரத்தில், துப்பாக்கி சுடும் மையம் அங்கிருந்து அகற்றப்பட வேண்டும் என கோரி, நார்த்தாமலையில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

அத்துடன், குண்டு பாய்ந்து காயமடைந்த விவகாரம் குறித்து கீரனூர் டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

மேலும், “துப்பாக்கி சூடும் மையம் பாதுகாப்பானதா என்று ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் இந்த சம்பவத்தை தொடர்ந்து, துப்பாக்கி சூடு பயிற்சி மையத்தை மூடுமாறும்” புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு, கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அதே போல், “துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் பாதுகாப்புடன் உள்ளதா? என ஆய்வு செய்யப்படும் என்றும்,  அந்த மையம் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு உகந்தது தானா என்றும் ஆய்வு மேற்கொள்ளப்படும்” என்றுமு், புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் தான், தலையில் துப்பாக்கிகுண்டு பாய்ந்து படுகாயமடைந்த 11 வயது சிறுவன் புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். 

தஞ்சை அரசு மருத்துவமனையில் சுமார் 4 மணி நேர அறுவை தீவிர சிகிச்சைக்கு பிறகு அந்த சிறுவன் தலையில் இருந்த குண்டு அகற்றப்பட்டது. ஆனாலும், அந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். 

இதனையடுத்து, சிறுவன் புகழேந்தியின் தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்த விவகாரத்தில், துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் இருந்து வெளியேறிய குண்டு தான் சிறுவன் உயிரிழப்புக்கு காரணம்” என்று, விசாரணை மேற்கொண்ட கோட்டாட்சியர் தனது விசாரணை அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் தாக்கல் செய்து உள்ளார். இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, “உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு பத்து லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.