“ஒமிக்ரான் தற்போது மிரட்ட தொடங்கியிருப்பதால், உங்களை அன்போடு மன்றாடி கேட்கிறேன்” என்று, தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா 3 வது அலை தொடங்கி விட்டதால், விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று பொது மக்களுக்கு தமிழக அரசு, நேற்றைய தினம் புதிய எச்சரிக்கை விடுத்தது.

இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் டெல்டா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் இணைந்து மூன்றாவது அலையை ஏற்படுத்தி வருவதாக” கவலைத் தெரிவித்து உள்ளார்.

இதனால், “மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக செலுத்திக் கொள்ள வேண்டும்” என்றும், அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவறுத்தினார்.

இந்த சூழலில் தான், தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் வரை 600 முதல் 700 வரை இருந்த கொரோனா தொற்று, திடீரென டிசம்பர் மாத இறுதியில் ஆயிரத்து 155 ஆக உயர்ந்தது.

அதனைத் தொடர்ந்து, புத்தாண்டின் முதல் நாளான நேற்று முன் தினம், தமிழகத்தில் மொத்தம் 1489 ஆக கொரோனா தொற்று அதிகரித்தது. 

ஆனால், இந்த பாதிப்பானது நேற்றைய தினம் இன்னும் உயர்ந்து தமிழகம் முழுவதும் 1,594 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதன்படி, நேற்யை தினம் 6 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். 

இந்த நிலையில் தான், இன்றை தினம் சென்னை சைதாப்பேட்டையில் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழக மக்கள் ஒமைக்ரான் வைரசில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, நாம் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று, கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது” என்றும், கவலைத் தெரிவித்தார்.

“ஆனால், அனைவரும் பாதுகாப்புடன் இருப்பது தான் எனக்கு மகிழ்ச்சி” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

மேலும், “ஒமைக்ரான் வைரஸ் தற்போது மிரட்டத் தொடங்கி இருக்கிறது என்றும், ஆனால் இதற்கு முந்தைய வைரசை விட, ஒமைக்ரான் வைரஸ் நோய்த் தாக்கம் சற்றுக் குறைவு” என்றும், அவர் கூறினார்.

அத்துடன், “நோயின் பரவலைத் தடுக்கும் பாதுகாப்பு கேடயமாக முக கவசம் விளங்குகிறது என்பதால், நாம் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும், பொது இடத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும்” என்றும், முதலமைச்சர் வலியுறுத்தினார்.

“நோய் எதிர்ப்பு சத்தியை கொடுக்கும் வீரியமுள்ள தடுப்பூசியை செலுத்தி உள்ளோம் என்றும், ஆகவே அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்” என்றும், தமிழக மக்களை முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக, “60 வயதுக்கு மேற்பட்டோர் கட்டாயம் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதை உங்கள் குடும்பத்தில் ஒருவனாக அன்போடு மன்றாடி கேட்டுக் கொள்கிறேன் என்றும், தொற்றில் இருந்து விடுபட்டுள்ள மாநிலத்திலும் தமிழகம் முதலிடம் பெற வேண்டும்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.