தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா தொற்று காரணமாக, ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டு உள்ள சில கட்டுப்பாடுகளுடன் மேலும் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. 

தமிழகத்தில் கொரோனா தாக்கத்தின் 2 வது அலை வீரியம் குறைந்து மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பிக்கொண்டு இருந்தது. 

இந்த நிலையில் தான், தமிழகத்தில் ஓமைக்ரான் தொற்று வைரஸ் சற்று வேகமாக பரவ ஆரம்பித்து உள்ளது. இதனால் தான், தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு அதிரடியாக தடை விதித்தது.

இவற்றுடன், ஓமைக்ரான் தொற்று வைரஸ் பாதிப்பு காரணமாக, இந்தியாவில் நேற்று முதல் உயிரிழப்பு நிகழ்ந்திருக்கிறது. அதுவும், மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று முதல் முறையாக ஒருவர் ஓமைக்ரான் தொற்று வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார்.

அதே நேரத்தில், “ஒமிக்ரான், டெல்டா வைரஸ்களால் சுனாமி பேரலையாக கொரோனா மாறும் ஆபத்து உள்ளதாகவும்” உலக சுகாதார அமைப்பு தற்போது புதிய எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இந்த நிலையில் தான், ஒமைக்ரான் பரவல் தமிழகத்திலும் தற்போது வேகம் எடுத்து உள்ளதால், அது இன்னும் தீவிரமாக பரவக் கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டு உள்ள சில கட்டுப்பாடுகளுடன் தற்போது மேலும் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

அதன்படி,

- திருமணம் மற்றும் அதைச் சார்ந்த நிகழ்வுகளுக்கு அதிக பட்சம் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

- உணவகங்கள், விடுதிகள், அடுமனைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுவார்கள். 

- பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை பூங்காக்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறார்கள்.

- குறிப்பாக, இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படுவார்கள்.

- கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், விளையாடு நிலையங்கள், உணவகங்கள் போன்றவை ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

- உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் 50 சதவீத  வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி.

- பொதுப் போக்குவரத்து பேருந்துகளில் உள்ள இருக்கைகளுக்கு மிகாமல் பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

- மெட்ரோ ரயிலில் 50 சதவீத பயணிகள் மட்டுமே அமர்ந்து பயணிக்க அனுமதி

- திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்து அரங்குகளும் 50 சதவீத பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதி

- திறந்த வெளி விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பயன்படுத்தி விளையாட்டுப் போட்டிகள் நடத்த அனுமதி.

- உள்விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 50 சதவீத பார்வையாளர்களுடன் போட்டிகள் நடத்த அனுமதி

- அழகு நிலையங்கள், சலூன்கள் உள்ளிட்டவைகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் என்றும், தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.