ஒரு தலையை காணோம், கையை காணோம், காலை காணோம் என்று சொல்லிக்கொண்டு யாரும் எங்களை வந்து கேட்க கூடாது என்று காடுவெட்டி குரு மகன் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கனலரசன்

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்கள் தவறாக சித்தரிக்க பட்டதாக எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. பாமக கட்சி சார்பில் படக்குழுவினர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வில்லன் கதாபாத்திரத்திற்கு குருமூர்த்தி என்று பெயரிடப்பட்டது இந்த சர்ச்சையில் முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது.

இந்நிலையில் வன்னியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் காடுவெட்டி குரு. அவரது பெயரை குறிப்பிட்டு வில்லன் கதாபாத்திரத்திற்கு சூட்டப்பட்டதும், அந்த கதாபாத்திரம் தொலைபேசியில் பேசும்போது பின்னணியில் அக்னி கலசம் படம் இருப்பது போன்ற காலண்டர் காட்டப்படுவதும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்த சர்ச்சை நீண்டு கொண்டே செல்லும் நிலையில்தான் ஊடகவியலாளர் மற்றும் அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் இந்த பிரச்சனைகளுக்கு காரணம் பாமக நிறுவனர் ராமதாஸ் என்றும் வன்னியர்கள் புண்பட்டுள்ளதாக கூறும் அவர் வன்னிய சமுதாயத்தின் ஒட்டுமொத்த பிரதிநிதியா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும் அந்தோணிசாமி கதாபாத்திரத்திற்கு குரு என்று பெயர் வைத்ததில் தவறு இருக்க முடியாது, இந்திய சுதந்திர போராட்டத்திற்காக அந்தமான் சிறைக்கு சென்றவர் கிடையாது குரு, என்று சவுக்கு ஷங்கர் பேசியிருந்தார். இந்நிலையில்தான் காடுவெட்டி குருவின் மகன் பேசிய வீடியோ ஒன்று வெளியானது.
அதில் சவுக்கு சங்கர் பெரிய ஞானியா ?  தயவுசெய்து என் கண்ணில் மாட்டிக்கொள்ள வேண்டாம் அவ்வளவுதான் நான் சொல்லுவேன். மைக் கிடைத்தால் யாரை விமர்சனம் செய்கிறோம் என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் உங்கள் இஷ்டத்துக்கு வாய்க்கு வந்த படி பேசக்கூடாது. நாளைக்கு இதன் விளைவுகள் உங்களுக்கு வந்தால் உங்களால் சமாளிக்க முடியுமா? 

அதனைத்தொடர்ந்து காடுவெட்டி குருவை நேசிக்கிற தீவிர விசுவாசிகள் லட்சக்கணக்கானபேர் வெளியில் இருக்கிறார்கள். நாளைக்கு ஒரு தலையை காணோம், காலை காணோம், கையை காணோம் என்று சொல்லிக்கொண்டு யாரும் தேடி வந்து எங்களை கேட்டு விடாதீர்கள். காவல்துறைக்கும் அதைத்தான் நாங்கள் சொல்கிறோம். நாளைக்கு ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்தால், எங்களை தேடி யாரும் வர வேண்டாம். ஏனென்றால் நீங்கள் பேசுகிற பேச்சு அப்படி இருக்கிறது என அந்த வீடியோவில்  காடுவெட்டி மகன் மகன் தெரிவித்திருந்தார்.