தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவரான சிவசங்கர் மாஸ்டர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பல சூப்பர் ஹிட் படங்களுக்கு நடன இயக்குனராகவும் நடிகராகவும் பணியாற்றியுள்ளார்.  குருவிக்கூடு திரைப்படத்தின் மூலம் நடன இயக்குனராக அறிமுகமான சிவசங்கர் மாஸ்டர் பாரதிராஜாவின் மண்வாசனை, மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் கைதி, பாலுமகேந்திராவின் மறுபடியும் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு நடன இயக்கம் செய்துள்ளார்.

மேலும் தளபதி விஜய்யின் பூவே உனக்காக,தல அஜித்தின் வரலாறு, சரத்குமாரின் சூரியவம்சம் ஆகிய படங்களுக்கு நடன இயக்கம் செய்துள்ள சிவசங்கர் மாஸ்டரின் திருடா திருடி படத்தில் இடம்பெற்ற மன்மத ராசா பாடலை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது. குறிப்பாக பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் மஹதீரா மற்றும் பாகுபலி ஆகிய திரைப்படங்களுக்கும் சிவசங்கர் மாஸ்டர் தான் நடன இயக்கம்.

இந்நிலையில் சிவசங்கர் மாஸ்டர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். சிவசங்கர் மற்றும் அவரது மூத்த மகனான விஜய் சிவசங்கர் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் சிவசங்கர் மாஸ்டர் அவர்களின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கில் சிகிச்சைக்கு செலவாவதால் அவரது குடும்பத்தினர் பணம் செலுத்த முடியாமல் முடியாமல் மிகுந்த சிரமத்தில் இருப்பதாக தெரிகிறது. எனவே திரையுலகைச் சேர்ந்த முன்னணி பிரபலங்கள் உதவ முன் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.