“தமிழகத்தில் தக்காளி விலை விரைவில் குறையும்” என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாகக் காய்கறிகளின் விலை அதிகரித்தது. புதுச்சேரியில் கடந்த ஞாயிறு அன்று கனமழை காரணமாகக் காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்தது. 

இந்நிலையில் மழைக்காலம் என்பதால் வரத்து இல்லாத நிலையில் தமிழகம் உள்பட இந்தியாவில் பல்வேறு இடங்களில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. கிலோ ஒன்றுக்கு சில்லறை விலையில் ரூ 130 முதல் 150 வரையும் மொத்த விலையில் ரூ 100 முதல் ரூ 130 வரையும் விற்கப்படுகிறது.

இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். தக்காளி இல்லாமல் சாம்பார் வைப்பது எப்படி, தக்காள் இல்லாமல் ரசம் வைப்பது எப்படி என்பதை கூகுளில் தேடி வருகிறார்கள். 

panneerselvam

தக்காளி விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதனிடையே தக்காளியை அதிக விலைக்கு விற்க யாராவது பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்தநிலையில்,  வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- “கோயம்பேடு சந்தைக்கு 620 டன் தக்காளி கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மழையால்தான் தக்காளி விலை அதிகரித்துள்ளது. மழை இல்லாத மாநிலங்களிலிருந்து தக்காளி கொண்டுவரப்பட்டு வருகிறது. கனமழையால் தக்காளி அதிகம் விளையும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.  

அறுவடை செய்யப்பட்ட தக்காளியை தமிழகம் கொண்டு வருவதில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. தக்காளி விலை உயர்வு தற்காலிகமானது தான். விரைவில் விலை குறையும், நடமாடும் காய்கறி கடைகள் மூலம் தக்காளி விற்பது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது” என்றார்.

tomato i periyasamy

மேலும் தமிழகத்தில்  கடந்த அதிமுக ஆட்சியில் முடங்கி கிடந்த 120 உழவர் சந்தைகளை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

தக்காளி விலையைக் கட்டுப்படுத்தும் வகையில் பசுமை பண்ணை காய்கறி கடைகளில் தக்காளி விற்கப்படும் என நேற்று அமைச்சர் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்திருந்தார். அதன்படி 65 பசுமை பண்ணை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 85 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். முதற்கட்டமாக நாளொன்றுக்கு 15 மெட்ரிக் டன்  கொள்முதல் செய்யப்படும். 

சென்னை, கோவை, தூத்துக்குடி, மதுரை, திருவண்ணாமலை, திருச்சி, தஞ்சையில் தக்காளி விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நெல்லை, திருப்பூர், சேலம், ஈரோடு, வேலூரில் அனைத்து காய்கறிகளுடன் பசுமைப் பண்ணை கடைகளில் தக்காளி விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.