தக்காளி விலை தங்கத்தை போல் உச்சத்தை தொட்ட நிலையில், ஒரே நாளில் தக்காளி விலை 40 ரூபாய் குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிச்சிக்குள்ளாகியுள்ளனர். 

பெட்ரோல், டீசல் மற்றும் தங்கம் விலையைப் போல் தாறுமாறாக தக்காளி விலையும் உயர்ந்துள்ளது. மூன்று கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்ற நிலையில், ஒரு தக்காளி 10 ரூபாய் என்ற அளவிற்கு விலையுயர்ந்து சாமானிய மக்களின் சமையல் பயன்பாட்டில் இருந்து விலகி நிற்கிறது.  ஆப்பிள் விலை அளவுக்கு இந்த தக்காளி விலை உயர்வால், மக்கள் தக்காளி இல்லாமல் எப்படி சமைப்பது என கூகுளில் தேடும் அளவிற்கு கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

சட்னி ஆக வேண்டிய தக்காளி ட்ரெண்டிங் ஆனது. இதனால் தக்காளியை வியாபாரிகள் பதுக்கும் நிலையும் உண்டானது. வடகிழக்குப் பருவமழையால் விளைநிலங்களில் வெள்ளம் சூழ்ந்ததே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. தக்காளி செடிகள் தண்ணீரில் மூழ்கி காய்கள் அழுகின. சந்தைகளுக்கு தக்காளி வரத்து குறைந்த காரணத்தால் விலை உச்சத்திற்கு சென்றது.

 இதனையடுத்து தமிழக அரசும் பண்ணை பசுமை காய்கறிகள் அங்காடி மூலமாக நேற்று முதல் தக்காளி ஒரு கிலோ 79 ரூபாய்க்கு விற்பனை செய்தது. பலரும் வரிசையில் நின்று தக்காளியை வாங்கிச் சென்றனர். ரேசன் கடைகளிலும் தக்காளி காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் ஐ. பெரியசாமி அறிவித்திருந்தார்.

tomato price koyembedu

இந்நிலையில் சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தக்காளி விலை குறையத் தொடங்கியுள்ளது. நேற்று வரை ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதே சமயம் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 160 ரூபாய் வரை விற்பனை ஆனது. 

இன்று லாரிகளில் வரத்து அதிகரித்ததால், தக்காளியின் விலை கிலோவுக்கு 40 ரூபாய் குறைந்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ நாட்டு தக்காளி விலை ரூ.30 குறைந்தது. கோயம்பேடு சந்தையில் நேற்று முதல் ரக தக்காளி கிலோவுக்கு ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று ரூ.30 குறைந்து,  கிலோவுக்கு ரூ.80-க்கு விற்பனையாகிறது. 

இதேபோல், 2-ம் ரக தக்காளி ரூ.100-ல் இருந்து ரூ.30 குறைந்து, ரூ.70-க்கு விற்பனையாகிறது. ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நேற்று 30 லாரிகளாக இருந்த தக்காளி வரத்து, இன்று 45 லாரிகளாக உயர்ந்துள்ளது. 

தக்காளியின் வரத்து மேலும் அதிகரிப்பது மூலம், அதன் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக கோயம்பேடு சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தக்காளி விலை குறைவால் இல்லத்தரசிகள் சற்றே நிம்மதியடைந்தாலும், மேலும் விலை குறைய வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்களின் எதிர்பார்ப்பாகும்.

tomato price koyembedu1

இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி மைதானத்தை திறந்தால் ரூ.40-க்கு தக்காளி விற்கத் தயார் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
 
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்ட தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கத்தினர், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோயம்பேட்டில் தக்காளி மார்க்கெட்டுக்கான மைதானம் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். 

இதனால் கோயம்பேட்டில் மூடப்பட்டுள்ள மைதானத்தை திறந்தால் அதிகளவில் தக்காளி லாரிகளை நிறுத்தி சரக்குகளை இறக்க முடியும். ராஜஸ்தான், ஆந்திரா, கர்நாடாகாவிலிருந்தும் லாரிகளில் தக்காளி கொண்டு வரலாம் எனக் கூறினர்.

கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி மைதானத்தை திறந்தால் விலை குறைப்பு சாத்தியம் எனவும், ஒரு கிலோ தக்காளியை ரூ.40 முதல் ரூ.50 வரை பொதுமக்களுக்கு விற்கத் தயார் என்றும், விலையை குறைத்து தமிழக அரசுக்கு உதவத் தயார் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.