தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாக வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால், 12 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என வானிலை ஆய்வு மையம் இன்று காலை தெரிவித்தது.

இதன் எதிரொலியால், தென் தமிழகம், கடலோர மாவட்டங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், இதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரெஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

ஏற்கனவே நேற்று உருவாக இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரம் தாமதமாவதாக கூறப்பட்ட நிலையில்  தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chennai IMD rain

மேலும் நவம்பர் 29-ம் தேதி அன்று அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது 2 நாளில் வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.  இது பிறகு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுமா என்பது குறித்து பின்னர் தெரியவரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகாவிட்டாலும் ஏற்கனவே கூறியபடி நாளை முதல் கனமழை இருக்கும் என்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. 

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியிருப்பதாவது: “தெற்கு வங்க கடற்பகுதியில் (3.1 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போதுள்ள சூழ்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதற்கு வாய்ப்பில்லை.

இந்த மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று ராமநாதபுரம், நெல்லை, துாத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமுதல் மிக கனமழையும், கடலுார், அரியலுார், கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்.

சென்னை கனமழை

ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை 26-ம் தேதி: கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கடலுார், விழுப்புரம், சேலம், நீலகிரி, கோவை, ஈரோடு டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

வரும் 27-ம் தேதி: காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும்.

வரும் 28-ம் தேதி: திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும்.

வரும் 29-ம் தேதி: தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை கனமழை வானிலை மையம்

அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். இன்று மற்றும் நாளை தினங்களில் குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

வரும் 27-ம் தேதி: குமரிக்கடல், மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 

வரும் 29-ம் தேதி: தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதன் காரணமாக சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” இவ்வாறு புவியரசன் தெரிவித்தார்.