“ஒமைக்ரான் என்னும் வைரஸ் புதிய மாறுபாட்டினை உருவாக்கி இன்னும் ஆபத்தாக மாற அதிகம் வாய்ப்புகள் உள்ளதாக” உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளை எச்சரித்து உள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதாக கூறப்படும் நிலையில், தற்போது உலகம் முழுக்க இந்த கொரோனா என்னும் கொடிய வைரஸ் கிட்டதட்ட 221 நாடுகளுக்கு பரவி மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன.

ஒரு பக்கம் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் படுதீவிரமாக நடைபெற்று வரும் அதே நிலையிலும், இன்னொரு பக்கம் அடுத்தடுத்த அலைகளாக கொரோனா அலை வீசி வருகிறது வேதனையாகவும் இருக்கிறது.

அத்துடன், கொரோனா என்னும் கொடிய தொற்று, பல மாறுபாட்டினை அடைந்து தற்போது ஒமைக்ரானாக உருமாறி உலகம் முழுவதும் பரவிக்கொண்டு வருகிறது.

அதன்படி, தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டுப்படிக்கப்பட்ட ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ், முதலில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று கணிக்கப்பட்டது.

ஆனால், ”அது பரவும் வேகம் இன்னும் அதிகமானாலும், டெல்டா வகை வைரசை விட சற்று குறைவான பாதிப்பையே அது ஏற்படுத்தும்” என்றும், பின்னர் கண்டுப்பிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் தான், “ஒமைக்ரான் வைரஸ் புதிய வைரசை உருவாக்கக்கூடும் என்றும், அது இன்னும் ஆபத்தாக மாறலாம்” என்றும், ஐரோப்பாவில் செயல்பட்டு வரும் உலக சுகாதார அமைப்பு தற்போது புதிய எச்சரிக்கையை உலக நாடுகளுக்கு விடுத்து உள்ளது.

இது தொடர்பாக பேசிய உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரி கேத்தரின் ஸ்மால்வுட், “தற்போது பரவி வரும் ஒமைக்ரான், அதிகம் பரவும் தன்மையை கொண்டதாக உள்ளது என்றும், ஆனால் அதன் பாதிப்பு தன்மை டெல்டாவை விட குறைவாகவே உள்ளது” என்றும், குறிப்பிட்டார். 

“ஆனால், அதே நேரத்தில் ஒமைக்ரான் வைரஸ் ஒரு புதிய மாறுபாட்டினை உருவாக்கும் வாய்ப்புகளை அதிகம் கொண்டு உள்ளது என்றும், அந்த புதிய மாறுபாட்டை கொண்ட வைரஸ் மிகவும் ஆபத்தானதாகவும், அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கலாம்” என்றும், அவர் எச்சரித்து உள்ளனார். 

இதனால், உலக நாடுகள் யாவும் மீண்டும் கலகத்தில் உள்ளன. கொரோனா வகையைச் சார்ந்த ஒமைக்ரான் வைரஸ், உலக மக்களை மீண்டும் பீதியில் ஆழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.