தமிழகத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது தொடர்பாக இன்று மாலை புதிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

lockdownsதமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. பொதுமக்கள் தேவையில்லாமல் பொது இடங்களில் கூட வேண்டாம் எனவும் வெளியில் செல்லும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் தமிழக அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

மேலும் தமிழகத்தில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மருத்துவத்துறை உயர் அதிகாரிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். உருமாறிய ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாவட்டம் வாரியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் ஓமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவதோடு மாவட்ட எல்லைகளில் கண்காணிப்புகளை கடுமையாக்குவது, பரிசோதனைகளை அதிகரிப்பது, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள், அறிவுறுத்தல்கள் தொடர்பான அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில்,வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களில் கட்டுப்பாடு, கடைகளின் செயல்பாட்டு நேரம் குறைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது குறித்தும் அறிவிப்பு வெளியாக உள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டது.