சென்னையில் உள்ள 1158 தெருக்களில் கொரோனா பாதித்தவர்கள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

corono cases

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 50 பிறழ்வுகளை கொண்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிப்பதற்கு முன்னரே பரவியுள்ளது. ஏற்கனவே இங்கிலாந்தில் ஆல்ஃபா, இந்தியாவில் டெல்டா, தென் ஆப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. அதற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஒமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஒமிக்ரான்  வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

தமிழ்நாட்டில் நேற்று 1,03,119 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1728 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 876 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று நிலவரப்படி கொரோனாவால் 6 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 662 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பினர். தமிழ்நாட்டில் இதுவரை 121 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  நேற்று புதிதாக யாருக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்படவில்லை. ஒமிக்ரான் பாதிப்பில் இந்தியாவில் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது.

மேலும் கொரோனா தாக்கம் தமிழ்நாட்டில் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது குறிப்பாக சென்னையில் சீரான வேகத்தில் அதிகரிக்கிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் தலைநகர் சென்னையில் மட்டும் 146  என பதிவாகியிருந்த தினசரி பாதிப்பு 776-ஆக அதிகரித்து 5 மடங்காக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில் சென்னையில் உள்ள 1158 தெருக்களில் கொரோனா பாதித்தவர்கள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் மொத்தமுள்ள 39,537 தெருக்களில் 1158 தெருக்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 170 தெருக்களில் 3-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கொரோனா பாதித்தவர்கள் உள்ளனர். 86 தெருக்களில் 4 க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கொரோனா பாதித்தவர்கள் உள்ளனர். 51 தெருக்களில் 5 க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கொரோனா பாதித்தவர்கள் உள்ளனர். 988 தெருக்களில் 3க்கும் குறைவான கொரோனா பாதித்தவர்கள் உள்ளனர். சென்னையில் மொத்தமாக 3486 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் 38,379 தெருக்களில் எவருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 228 தெருக்களில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் காரணத்தால்  தமிழக அரசு முக்கிய நடவடிக்கைகளை கையிலெடுக்கும் என தெரிகிறது. ஏற்கெனவே கடற்கரைக்கு செல்ல தடை, தியேட்டரில் 50% இருக்கைகளுக்கு அனுமதி போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.