தமிழக சட்டசபை ஆளுநர் உரையுடன் இன்று கூடும் நிலையில், கொரோனா காரணமாக இன்று ஒரே நாளில் சட்டசபையை முடித்துவிடவும் திட்டமிடப்பட்டு இருப்பதாக” தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

ஒவ்வொரு ஆண்டு தொடங்கும் போதும், தமிழக சட்டசபை கூடும். அப்படி ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்தில் சட்டசபை கூடும்போதெல்லாம் ஆளுநர் சட்டசபைக்கு வந்து உரையாற்றுவது காலம் காலமாக மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டமான, இன்று தொடங்குகிறது.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் அச்சுறுத்தல் இருந்து வரும் சூழ்நிலைக்கு மத்தியில் தான், இன்றைய தினம் தமிழக சட்டமன்றம் கூட இருக்கிறது.

அதே நேரத்தில், கடந்த 2 வருடங்களாக தமிழகத்தில் கொரோனா அலை எழுந்த போது, சென்னை கலைவாணர் அரங்கத்தில் தான் சட்டசபை கூட்டம் நடைபெற்றது.

அதன்படியே, தற்போதும் தமிழகத்தில் கொரோனா 3 வது அலை பரவத் தொடங்கி உள்ள சூழ்நிலைக்கு மத்தியில் தான் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டத் தொடர் தொடங்குகிறது. 

இந்த ஆண்டின் முதல் கூட்டம் இன்று கூட உள்ளதால், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று உரை ஆற்றுகிறார்.

இதற்காக, இன்று காலை 9.55 மணிக்கு அவர் சென்னை கலைவாணர் அரங்கத்திற்கு வருகை தருகிறார்.

அதன்படி, இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குகிறது. 

அதன் பிறகு, ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை நிகழ்த்துவார்.

அதன்படியே இன்றைய கூட்டம் நிறைவடையும். அதன் பிறகு, சபாநாயகர் அப்பாவு தலைமையில் அவரது அறையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில், “ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது?” என்பது குறித்து, ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

ஆனால், தற்போது தமிழக சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க இருக்கும் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர், கொரோனா பரிசோதனை செய்து கொண்டு உள்ளனர்.

அப்போது, பெரம்பலூர் திமுக எம்எல்ஏ பிரபாகரனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள கேஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அதே போல், திருச்சி காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசின் மகனும் அறந்தாங்கி தொகுதி எம்எல்ஏவுமான எஸ்.டி.ராமச்சந்திரனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து, அவரும் சென்னையில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்.

இப்படியாக, எம்எல்ஏக்கள் இருவருக்கு தற்பேர்த கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாலும், தமிழகத்தில் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்க தொடங்கி இருப்பதாலும், இன்று கூடும் தமிழக சட்டசபை கூட்டத்தொடரை, முன்கூட்டியே முடித்துக்கொள்ள திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிகிறது. 

குறிப்பாக, அலுவல் ஆய்வு குழு கூட்டத்திலும் இது குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.

அதே நேரத்தில், இன்று மதியம் மீண்டும் சட்டசபையை கூட்டி, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை நடத்தி, இன்று ஒரே நாளில் கூட்டத் தொடர்ரை முடித்து விடவும் திட்டமிடப்பட்டு இருப்பதாகவும், தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முக்கியமாக, தினமும் தலைமை செயலகம் வந்து செல்லும் பத்திரிகையாளர்கள், சட்டசபை ஊழியர்கள் என மொத்தம் 12 பேருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ஒரே நாளில் தமிழக சட்டசபை கூட்டத்தை நிறைவு செய்யவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.