திருவான்மியூர் ரயில் நிலையத்தில் தன்னை துப்பாக்கி முனையில் கட்டிப்போட்டு விட்டு 1.32 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றதாக  நாடகமாடிய ரயில்வே ஊழியர் டீக்காராம் மீனா மனைவியுடன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் நேற்று அதிகாலை நேரத்தில் டிக்கெட் கவுண்ட்டரில் ஊழியரை கட்டிப் போட்டு 1.32  லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம், தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இது குறித்து தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிரமான புலன் விசாரணையில் இறங்கினர்.

அப்போது, “யாரோ மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் என்னை கட்டிப்போட்டுவிட்டு, இங்கிருந்த பணத்தையெல்லாம் கொள்ளை அடித்துவிட்டு சென்றுவிட்டதாக” கூறியிருக்கிறார்.

இது தொடர்பான விசாரணையில், சம்மந்தப்பட்ட திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில், சிசிடிவி கேமராக்களா் எதுவும் இல்லாத நிலையில், அதன் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை ரயில்வே போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வந்தனர்.

அப்போது, அந்த ரயில் நிலையம் பகுதியில் அமைந்திருந்த ஒரு சிசிடிவி கேமராவில் வட மாநிலத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியரான டிக்காராமின் மனைவி வந்து செல்லும் காட்சிகளும் அதில் பதிவாகி இருந்தது. 

அதன் அடிப்படையில், போலீசாருக்கு இந்த வட மாநிலத்தைச் சேர்ந்த ரயில் ஊழியர் டிக்காராம் மீது லேசாக சந்தேகம் வந்துள்ளது.

இதனால், டிக்கெட் கவுண்டரில் பணியாற்றி வந்த அரசு ஊழியர் டிக்காரம் மற்றும் அவரது மனைவியிடம் போலீசார் சற்று சந்தேகத்தின் பேரிலேயே தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, அந்த ரயில்வே ஊழியரான டிக்காராமே, தனது மனைவியின் மூலமாக இந்த கொள்ளை சம்பவத்தை நடத்திவிட்டு, அங்கிருந்த பணம் 1.32 லட்சத்தை அவரது மனைவியிடமே கொடுத்து அனுப்பிவிட்டு, அவரைக்கொண்டு, தன்னை கட்டிப்போட வைத்து, இந்த கொள்ளை சம்பவத்தை அரற்கேற்றியது வெளிச்சத்திற்கு வந்தது. 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த போலீசார்,  ரயில்வே ஊழியரான டிக்காராமை அதிரடியாக கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாக, அவரது மனைவியையும் போலீசார் அதிரடியாக கைது செய்து, அவர்களது வீட்டில் பதுக்கி வைத்திருந்த கொள்ளையடித்த பணத்தையும் போலீசார் பத்திரமாக மீட்டு உள்ளனர். 

மேலும், இந்த கொள்ளை நாடகம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம், சக ரயில்வே ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியயும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.