பிரதமர் நரேந்திர மோடியின் பேரணியின் போது, அவருக்கு கருப்புக் கொடி காட்டிய காங்கிரஸ் தலைவர் ரீட்டா யாதவ் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

சுதந்திர இந்தியாவில் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தான் இப்படி கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ரீட்டா யாதவ் என்ற பெண், கடந்த மாதம் சமாஜ்வாடி கட்சியில் இருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இந்த சூழலில் தான், உத்தரப் பிரதேசம் மாநிலம் சுல்தான்பூரில் கடந்த நவம்பர் 16 ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட ஒரு பேரணியில்? காங்கிரஸ் கட்சியைத் தேர்ந்த தலைவரான ரீட்டா யாதவ், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டியதற்காக, சமீபத்தில் அந்த மாநில ஊடகங்களில் தொடர்ச்சியாக செய்திகளில் வெளியானது.

இந்த நிலையில் தான், உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ - வாரணாசி நெடுஞ்சாலையில், ரீட்டா யாதவ் சென்றுக்கொண்டிருந்த காரை வழிமறித்து நிறுத்திய மர்ம நபர்கள் 3 பேர், ரீட்டா யாதவின் கார் ஓட்டுநரை துப்பாக்கி முனையில் நிறுத்தி உள்ளனர்.

இதனால், அவர் அந்த காரை மேற்கொண்டு இயக்கவில்லை. பயத்தில் அப்படியே நிறுத்தி உள்ளார். இதனையடுத்து, அந்த மர்ம நபர்கள் 3 பேரும், கண் இமைக்கும் நேரத்தில் ரீட்டா யாதவ் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு, அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று உள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயம் அடைந்த ரீட்டா யாதவ், உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது, ரீட்டா யாதவ் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும், அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டராங்கள் தெரிவித்து உள்ளன.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி அங்குள்ள சுல்தான்பூரில் உள்ள லாம்ஹுவா காவல் நிலையத்தில் “அடையாளம் தெரியாத அந்த 3 நபர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு” செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது தொடர்பாக இது வரை ஒருவரை கூட போலீசார் கைது செய்யவில்லை.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தினால், உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியும் ஏற்பட்டு உள்ளது.

இதனால், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம், ஆளும் பாஜகவிற்கு பெரும் அவப் பெயரை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.