அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணை, அரசு டாக்டர் ஒருவர் பணத்திற்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்து பணம் பறித்த சம்பவத்தில், சிகிச்சைக்காக பெறப்பட்ட பணத்தை உடனே திருப்பி வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி அன்று, அங்குள்ள மடத்துக்குளம் வட்டம் காரத்தொழுவு பகுதியை சேர்ந்த மருதமுத்து என்பவரின் மனைவி ராஜராஜேஸ்வரி என்ற கர்ப்பிணி பெண், பிரசவ வலி ஏற்பட்டு சிகிச்சைக்காக வந்தருக்கிறார்.

இதனையடுத்து, அந்த பெண் அந்த அரசுப் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 

அப்போது, அவர்களை பரிசோதித்த அரசு மருத்துவர்கள், “குழந்தை வயிற்றில் இறந்து விட்டதாகவும், அந்த சிசு தானாக பிரசவித்து விடும்” எனக் கூறி, 4 நாட்கள் மருத்துவமனையிலேயே தங்க வைத்து உள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, கர்ப்பிணியான ராஜராஜேஸ்வரிக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது.

அப்போது, அந்த அரசு மருத்துவமனையில் பணியாற்றிய வந்த ஜோதிமணி என்கிற அரசு பெண் டாக்டர், “சிகிச்சைக்கு வந்து 4 நாட்கள் ஆன பிறகு குழந்தை வெளியே வராத காரணத்தால், ராஜராஜேஸ்வரியை அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அறுவைச் சிகிச்சை செய்து உள்ளார். 

இந்த அறுவை சிகிச்சைக்கா, அந்த அரசு மருத்துவர் 37 ஆயிரம் ரூபாய் கட்டணமாக பெற்று இருக்கிறார்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட அந்த பெண் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. 

இந்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட பெண் டாக்டரை பணியிடை மாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, அந்த பெண் டாக்டர் முதலில் தாராபுரத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், அதன் பிறகு கூடலுருக்கு மாற்றப்பட்டார்.

அப்போது, இந்த பெண் மருத்துவரின் நடவடிக்கை பற்றி தெரிந்த கூடலூர் பகுதி வாழ் மக்கள், “இந்த பெண் டாக்டர் எங்களது மருத்துவமனைக்கு வரக்கூடாது” என்று, போர்க்கொடி தூக்கி உள்ளனர். 

இந்த நிலையில், கர்ப்பிணி பெண்ணிடம் சிகிச்சைக்காக பெறப்பட்ட தொகையை திருப்பி வழங்க கோரி, அந்த பெண் டாக்டருக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித் தற்போது அதிரடியாக உத்தரவிட்டு உள்ளார். ஆனாலும், இந்த பணத்தை அந்த கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்தினர் பெற்றுக்கொள்ளவில்லை என்றும், கூறப்படுகிறது.

இதனிடையே, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணை, அரசு டாக்டர் ஒருவர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அறுவை சிகிச்சை செய்து, கட்டணம் வசூலித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.