கொரோனா தடுப்பூசி மையங்களில் ‘பூஸ்டர்’ தடுப்பூசி போடுகிறவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

covid booster

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்தில் ஆல்ஃபா, இந்தியாவில் டெல்டா, தென் ஆப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. அதற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 50 பிறழ்வுகளை கொண்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிப்பதற்கு முன்னரே பரவியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது.

இந்நிலையில் ஒமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஒமிக்ரான்  வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய , மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன . வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் முழு வீச்சில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது.

தமிழகத்தில் உள்ள கொரோனா தடுப்பூசி மையங்களில் தனி கவுண்ட்டர்கள் அமைத்து ‘பூஸ்டர் டோஸ்’ போடுகிறவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட துணை இயக்குனர்களுக்கு, டாக்டர் செல்வவிநாயகம் கடிதம் எழுதியுள்ளார். 

பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் அனைத்து மாவட்ட துணை பொது சுகாதாரத்துறை இயக்குனர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 3-ம் தேதி முதல் 15 முதல் 18 வயதினருக்கும், கடந்த 10-ம் தேதி முதல் ‘ கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் முன்களப் பணியாளார்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கும் பூஸ்டர் டோஸ்’ போடும் பணி தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த 11-ம் தேதி நிலவரப்படி 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களில் 23 லட்சத்து 34 ஆயிரத்து 845 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது 70 சதவீதம் ஆகும்.

மேலும் இதைப்போல் ‘பூஸ்டர் டோஸ்’ போட தகுதியான 20 ஆயிரத்து 765 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 10 ஆயிரத்து 91 சுகாதாரப் பணியாளர்களும், 5 ஆயிரத்து 482 முன்களப் பணியாளர்களும், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோயுள்ள 5 ஆயிரத்து 192 பேரும் அடங்குவர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கொரோனா தடுப்பூசி மையங்களில் ‘பூஸ்டர் டோஸ்’ போடுகிறவர்களுக்கும், 15 முதல் 18 வயதுடையவர்களுக்கு ‘கோவேக்சின்’ தடுப்பூசி போடுவதற்கு சிறப்பு கவுண்ட்டர்கள் அல்லது வரிசைகள் ஏற்படுத்தி முன்னுரிமை வழங்க வேண்டும்.

அதனைத்தொடர்ந்து தற்போது செயல்பட்டு வரும் தனியார் கொரோனா தடுப்பூசி மையத்தில் வழக்கமாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி அல்லாது ‘பூஸ்டர் டோஸ்’ மற்றும் 15 முதல் வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தொடங்க தனியார் நிறுவனத்துக்கு அறிவுறுத்த வேண்டும்.

தமிழகத்தில் உள்ள பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர்கள், அரசு மருத்துவ கல்லூரி ‘டீன்’கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு, 2-வது தவணை தடுப்பூசி போட்டு 273 நாட்கள் ஆன ‘பூஸ்டர் டோஸ்’ போட தகுதியானவர்கள் அனைவரும் 3-வது தவணை தடுப்பூசி போடுவதை உறுதி செய்யவேண்டும்” என்று தெரிவிக்கப்படுள்ளது.