இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களால் தமிழ் திரை உலகில் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை ப்ரியாமணி, எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். முன்னதாக தமிழில்  இயக்குனர் அமீரின் பருத்திவீரன் திரைப்படத்திற்காக ப்ரியாமணி தேசிய விருது பெற்றார்.

தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என இந்தியாவின் பல மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ள ப்ரியாமணி அனைத்து மொழிகளிலும் சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதுகளை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ப்ரியாமணியின் திரைப்படங்கள் பல மொழிகளின் திரையுலகிலும் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன.

முன்னதாக தெலுங்கில் ராணா டகுபதி உடன் இணைந்து விரட்ட பர்வம் மற்றும் தெலுங்கு & கன்னட மொழிகளில் தயாராகி வரும் சைனைட் ஆகிய படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ப்ரியாமணி இயக்குனர் அட்லி இயக்கத்தில் இந்தியில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் தமிழில் கொட்டேஷன் கேங் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இதனிடையே வித்தியாசமான கதாபாத்திரத்தில் ப்ரியாமணி கதாநாயகியாக நடித்துள்ள பாமா கலபம் திரைப்படம் நேரடியாக aha Original OTT தளத்தில் ரிலீசாக உள்ளது. SVCC DIGITAL சார்பில், போகவள்ளி பப்பிநீடு & சுதீர் எடரா இணைந்து தயாரித்துள்ள பாமா கலபம் படத்தை இயக்குனர் அபிமன்யு எழுதி இயக்கியுள்ளார். தமிழ் நடிகர் ஜான் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் தீபக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள பாமா கலபம் திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். நகைச்சுவை த்ரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் இப்படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. பெண் தெய்வங்கள் போல எட்டு கைகளோடு ப்ரியாமணி இருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…