சென்னையில் மாணவிகளுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாக தனியார் கல்லூரி பேராசிரியர் ஒருவர், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 2 பிரிவுகளின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

sexual harassment

சென்னை கோயம்பேட்டில் செயல்படும் தனியார் கல்லூரி ஒன்றின் ஆங்கில பேராசிரியர் மாணவிகளிடம் தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதை அடுத்து கல்லூரி நிர்வாக அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நிலையில் ஆங்கிலப்பேராசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை கோயம்பேடு பகுதியில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. மாணவ-மாணவியல் பயிலும் கல்லூரி ஆகும். இந்தக்கல்லூரியின் ஆங்கில பேராசிரியராக தமிழ்செல்வன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் இரண்டாம் ஆண்டு ஆங்கில துறையில் படித்துவரும் மாணவி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து நிர்வாகத்திடம் முறையிட்டு பலனில்லாததால் ஆங்கிலத் துறை பேராசிரியர் தமிழ்ச்செல்வன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இரண்டாம் ஆண்டு படித்து வரக்கூடிய மாணவ மாணவிகள், கல்லூரி நிர்வாக அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.

அதனைத்தொடர்ந்து இது தவிர தமிழ்செல்வன், கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவிகளுக்கு வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பாலியல் ரீதியாக மெசேஜ்கள் அனுப்பி துன்புறுத்தல்களில் ஈடுபட்டதாகவும், உச்சகட்டமாக மாணவி ஒருவருக்கு நேரடியாக அளித்த பாலியல் தொல்லை காரணமாக மாணவ மாணவிகள் நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்திய மாணவர்களிடம் கல்லூரி முதல்வர் தங்கவேல் சமரசம் பேசினார். நடவடிக்கை இல்லாததால் போராட்டம் தொடர்ந்தது.சாலை மறியலிலும் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியலுடன் இரண்டாம் நாளும் போராட்டம் தொடர்ந்ததால் கோயம்பேடு பேருந்து நிலைய காவல்துறையினருக்கு கல்லூரி நிர்வாகம் புகார் அளித்தது. உடனடியாக கோயம்பேடு உதவி ஆணையர் தலைமையில் ஆய்வாளர்கள் அடங்கிய குழு போராடும் மாணவ -மாணவியரிடையே விசாரணை நடத்தியது.

இந்நிலையில் மாணவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு கல்லூரி முதல்வர் தங்கவேல் ஆங்கில துறை பேராசிரியர் தமிழ்செல்வனை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார். முதல்வர் தலைமையில் கமிட்டி அமைத்து பாதிக்கபட்ட நபரை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் பேரில் அனைவரும் தற்காலிகமாக கலைந்து சென்றனர்.

மேலும் கல்லூரி நடவடிக்கை திருப்தி அளிக்க வில்லை, நடவடிக்கை இல்லை ஆசிரியரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுவதாக கூறி மீண்டும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் மீண்டும் வந்து சமாதானம் பேசியும் பயனில்லாததால் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசியர் தமிழ்ச் செல்வன் மீது பெண் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.