பேருந்து நிலையத்தில் +1 மற்றும் +2 மாணவர்கள் கும்பலாக தாக்கிக்கொள்ளும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

school

கடந்த 2 வருடங்களாக கொரோனா பெருந்தொற்று பல்வேறு தரப்பு மக்களையும் வாட்டி வருகிறது. இதற்கிடையில், கொரோனா தொற்று காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால்,  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது. மேலும் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன்னர்தான் பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வந்தது. கொரோனாவின் பாதிப்பு சற்று குறையத் தொடங்கியதால் கல்லூரிகளிலும் வாரம் 6 நாட்கள் பாடம் நடத்தலாம் என்றும், அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளில் வகுப்புகள் நடத்தலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டம் பேரையூர் பேருந்து நிலையத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். பள்ளி மாணவர்கள் அடித்துக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை அடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் என எங்கு சென்றாலும் மாணவர்கள் இருதரப்பாக பிரிந்துத்தான் செயல்பட்டு வருகின்றனர், சீனியர், ஜுனியர் என்ற அடிப்படையிலும், இரண்டு சமூகம் என்ற அடிப்படையிலும் ஒருவித பகை உணர்வோடுத்தான் சென்று வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் சென்னையில் அடிக்கடி நிகழும் பேருந்து மற்றும் ரயில்களில் பிரபல கல்லூரி மாணவர்கள் அடிக்கடி தாக்கிக் கொள்ளும் சம்பவங்களை பார்த்து வருகிறோம்.

மேலும் மதுரை மாவட்டம் பேரையூர் பேருந்து நிலையத்தில் பேருந்தில் செல்வதற்காக மாணவர்கள் காத்துக் கொண்டிருந்தனர். அரசுப் பள்ளியில் படிக்கும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களிடையே முன்விரோதம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் +1 மாணவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது +2 மாணவர்கள் அவர்களை கலாய்த்ததாக தெரிகிறது.  இதனால் ஆத்திரமடைந்த +1 தரப்பு வாக்குவாதத்தில் ஈடுபட மோதலாக மாற தொடங்கியது.

இந்நிலையில் ஆரம்பத்தில் சாதாரணமாக ஆரம்பித்த சண்டை இருதரப்பினரிடையே சாதிக் கலவரம் போல் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டனர். இருதரப்பு மாணவர்களை விலக்கி விட சில மாணவர்கள் முயன்றனர். பேருந்து நிலையத்தில் இருந்த பெண்களும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இருதரப்பினரையும் திட்டினர். சிலர் நமக்கெதுக்கு வம்பு என எதுவும் தெரியாததுபோல் கடந்து சென்றனர். ஆனால் இருதரப்புக்கு கோபம் அடங்கவில்லை.

இந்நிலையில் இவர்கள் மோதிக்கொள்ளும் சம்பவத்தை பேருந்தில் இருந்த பயணி ஒருவர் தனது செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தமிழ்நாடு முழுவதும் வைரலாகி வருகிறது.இந்த சம்பவம் குறித்து சிலர் பேரையூர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, அதற்கு போலீசார் இது போன்று மாணவர்கள் அடித்துக்கொள்ளும் சம்பவம் அடிக்கடி நடப்பதுதான் என்று தெரிவித்தார்கள்.

அதனைத்தொடர்ந்து இந்த  வீடியோ வைரல் ஆனதால் பேசப்படுகிறது அவ்வளவுதான் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருந்தாலும் இந்த வீடியோ வைரல் ஆனதால் போலிசார் வீடியோ காட்சிகளில் பதிவாகியுள்ள மாணவர்கள் அடையாளம் கண்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.