தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்பை போதிப்போம், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து பாதுகாப்புடன் கிறிஸ்துமஸ் கொண்டாட வேண்டும் என்று அன்போடு கேட்டு என் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறேன் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

christmas

இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த கிறிஸ்துமஸ் விழாவின் நாளில் கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்கு சென்று வழிபட்டு வீடுகளில் ஸ்டார் குடில்கள் அமைத்து உற்சாகமாக கொண்டாடுவார்கள். கிறிஸ்துமசை கொண்டாடும் மக்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சிறுபான்மை மக்களின் உரிமைகளை தமிழக அரசு பாதுகாக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உன்னிடத்தில் கேட்கிறவனுக்கு எனக்கு கொடு என ஈகையையும் ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள் என்று சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையையும் எதிரிகளையும் நேசியுங்கள் பகைவருக்கும் நன்மை செய்யுங்கள் என எக்காலத்தும் போற்றத்தக்க உயர்ந்த அன்பையும் போதித்த மனிதநேய மாணிக்கம் இயேசுபிரான் பிறந்த நாளை உலகெங்கும் உள்ள கிறிஸ்தவ மக்கள் கிறிஸ்துமஸ் பெரு விழாவாகக் கொண்டாடுகின்றனர்.

மேலும் அன்பும் அமைதியும் அவரது வாழ்விலும் தவழ்ந்திட வேண்டும் என்ற உயரிய நோக்கோடு இவ்விழா கொண்டாடப் படுவதுடன், அன்பினை பரிமாறிக்கொள்ள ஒருவருக்கொருவர் பரிசுப் பொருட்களையும் ஏழை எளியோருக்கு உதவிகளையும் வழங்கி மகிழ்கின்றனர். அனைவரும் சமம் என்ற சமத்துவக் கொள்கை இந்நாளில் மிளிர்வதை காண்கிறோம் என தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியிலும் தமிழ் மொழியின் வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றிய கிறிஸ்துவ மக்களின் நலனையும் உரிமைகளையும் பாதுகாப்பதில் திராவிட முன்னேற்ற கழகமும் கழக அரசும் என்றைக்கும் தோளோடு தோள் சேர்ந்து துணை நிற்கின்றது. அதே வழியில் தொடர்ந்து பயணித்து சிறுபான்மை மக்களின் உரிமைகளை நமது அரசு பாதுகாக்கும். மகிழ்ச்சி பொங்க கொண்டாடப்படும் இந்த விழாவில் கொரோனா கால பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும் என்று அன்போடு கேட்டு என் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறேன் என்று முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து அதிமுக சார்பில் அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை: அன்பின் திருவுருவாம் கருணையின் வடிவமாம் இயேசுபிரான் அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் திருநாளாகக் கொண்டாடி மகிழும் கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் எங்களது இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் ஆண்டவனின் பிள்ளைகளாகிய நாம் அன்புடனும் சகோதரத்துவ உணர்வுடனும் இயேசுபிரானின் உயரிய நெறியைப் பின்பற்றி பகைவர்களிடத்திலும் அன்பு காட்டி வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் வாழ இந்த இனிய நாளில் உறுதியேற்போம். அன்பால் உலகை ஆட்கொண்ட தேவகுமாரனாகிய இயேசுபிரான் பிறந்த நன்னாளில் அவர் போதித்த அன்பு, எளிமை, கருணை போன்ற உயரிய குணங்களை மக்கள் அனைவரும் பின்பற்றி சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று கேட்டுக்கொண்டு எங்கள் அன்புக்குரிய கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை அன்போடு உரித்தாக்கிக் கொள்கிறோம். மலர இருக்கும் 2022 புத்தாண்டில் அனைவருக்கும் நல்லனவெல்லாம் நடைபெற்றிட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம் என இருவரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.