சென்னை திருவொற்றியூர் அருகே குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இன்று காலை திடீரென இடிந்து விழுந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சென்னை திருவொற்றியூர் அருகேயுள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பு இன்று காலை திடீரென்று சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குடிசைமாற்று குடியிருப்பானது 23 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. 

இதில் மொத்தம் 331 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இதில் ஒரு பகுதியாக தனியாக கட்டிடம் இருந்துள்ளது. இந்த கட்டிடத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 
இந்நிலையில் இன்று காலை கட்டிடத்தில் திடீரென்று விரிசல் ஏற்பட்டுள்ளது. விரிசல் அதிகமாவதை கண்ட பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளனர். 

building collapses chennai thiruvottriyur

வீடுகளில் இருந்த அனைவரும் வெளியேறிய நிலையில் அருகில் இருந்த மக்கள் ஆபத்தை உணராமல் வீட்டின் அருகே இருந்ததாலும் விரிசல் அதிகமாவதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியே கூச்சலிட்டு அவர்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். 

கட்டிடமானது விரிசலுடன் சற்று சாய்ந்த நிலையில் இருந்தது. இதுகுறித்து உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளுக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் கட்டிடமானது திடீரென்று சரிந்து விழுந்தது. 

இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் முற்றிலும் சேதமடைந்துள்ளன. யாருக்கும் காயங்கள் இன்றி அனைவரும் வெளியேற்றப்பட்டனர். கட்டிடமானது ஏற்கனவே விரிசல் ஏற்பட்டு பழுதடைந்த நிலையில் இருந்ததால் இதன் கட்டிடத்தை சீரமைப்பது குறித்து பலமுறை புகார்கள் அளிக்கப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு இந்த கட்டிடத்தை புதுப்பித்து தருவதற்காக மனுக்கள் அளித்துள்ள நிலையில் இதுவரை இந்த கட்டிடத்தின் உறுதி தன்மை குறித்து யாரும் ஆய்வு செய்யவில்லை. இந்நிலையில் இந்த கட்டிடமானது இடிந்து விழுந்துள்ளது. 

இதுகுறித்து தற்போது காவல்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், தீயணைப்புத்துறையா அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இடிபாடுகளில் யாரேனும் சிக்கி உள்ளனரா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். 

அடுக்குமாடி கட்டிடமானது திடீரென்று இன்று சரிந்து விழுந்ததில் அனைத்து பொருட்களும் சேதமடைத்ததால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தங்குவதற்கு கூட இடமில்லாமல் தற்போது தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள் இடிந்து விழுந்து பாதிப்படைந்தவர்களுக்கு உடனடியாக மாற்று வீடுகள் மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

building collapse chennai thiruvottriyurஇதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவொற்றியூரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினால் 1993-ல் கட்டப்பட்ட பழைய குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததில் 24 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்து அதனால் மக்கள் பாதிப்படைந்த செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன்.

விபத்து நடந்த பகுதிக்கு உடனடியாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனை நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அனுப்பி வைத்து விபத்தில் வீடு இழந்த குடும்பத்தினருக்கு உடனடியாக மாற்று குடியிருப்புகள் வழங்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.

பாதிக்கப்பட்ட மக்கள், பாதிப்பிலிருந்து மீண்டும் புதிய வாழ்க்கையைத் துவங்க 24 குடும்பங்களுக்கு தலா ரூபாய் ஒரு லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். 

இதுபோன்ற விபத்து ஏற்படாத வகையில் பழைய குடியிருப்புகளின் விபரங்களைச் சேகரிக்கவும், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்தை தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அமைச்சர் தா.மோ.அன்பரன் நேரில் சென்று ஆய்வு செய்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தா.மோ அன்பரசன் பேசியதாவது, “சென்னையில் 40 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட  மக்கள் வாழ்வதற்கு தகுதியற்ற வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என்ற கடந்த ஆட்சியாளருக்கு இல்லை.

தி.மு.க. அரசு பொறுப்பேற்றப் பிறகு சென்னையில் மட்டும் அனைத்து தொகுதிகளிலும் வாழ்வதற்கு தகுதி இல்லாத 23 ஆயிரம் வீடுகள் இருக்கிறது என்பதை கணக்கெடுக்கப்பட்டுள்ளது. 

சேதமடைந்த இருபத்தி நான்கு வீடுகளுக்கு பதில் அடுத்த மூன்று வருடங்களில் புதிய வீடுகளை கட்டி தர முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.  

முதலமைச்சர் அறிவித்துள்ள நிதி இன்று மாலைக்குள் மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்படும். வீடுகளை இழந்த 24 குடும்பங்களுக்கு மாற்று இடங்களில் ஓரிரு நாட்களில் வீடு வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.