தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராகவும் சிறந்த நடிகராகவும் விளங்கும் நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஜெய் பீம் திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளிவந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. மேலும் உலக அளவில் IMDb பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு அவர்களின் தயாரிப்பில் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்திலும் தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கத்தில் புதிய திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.

முன்னதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். சூர்யாவுடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன், வினய், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, M.S.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், இளவரசு, தேவதர்ஷினி, ரெட்டின் கிங்ஸ்லீ என மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர்.

முன்னணி ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பு செய்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். அடுத்த ஆண்டு(2022) பிப்ரவரி 4-ஆம் தேதி திரைக்கு வரவுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் முதல் பாடலாக வாடா தம்பி பாடல் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த பாடல் நாளை (டிசம்பர் 27) மாலை 6 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.