“தமிழகத்தில் வரும் 25 ஆம் தேதி முதல் வரும் ஜனவரி 2 ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்படுவதாக” பள்ளிக் கல்வித் துறை, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக்கு முன்னதாக அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

அதன்படி, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக விடப்படும் விடுமுறையானது, ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு பண்டிகைக்குப் பிறகு மீண்டும் பள்ளிகள் துவங்கப்படுவது வழக்கமாகும். 

இதனால், ஆண்டு தோறும் இந்த அரையாண்டு தேர்வு விடுமுறையானது சுமார் 10 நாட்களுக்குப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமில்லாது, ஆசிரியர்களுக்கும் விடுமுறையாக இருந்து வருகிறது.

ஆனால், தற்போது நடப்பு கல்வியாண்டான 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இன்னும் 2 நாட்களில் கிறிஸ்மஸ் பண்டிகை வர உள்ளது. என்றாலும், “கொரோனா தொற்று காரணமாக, இந்த ஆண்டு தாமதமாகப் பள்ளிகள் திறக்கப்பட்டதாலும், பாடத்திட்டங்கள் முடிக்க முடியாத நிலை இருப்பதாலும், இந்த ஆண்டு அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்க வேண்டாம்” என்று, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இதனால், சக ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த செய்தியைக் கேள்விப்பட்டு கடும் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், “தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாடுவதற்காக விடுமுறை அறிவிக்க வேண்டும்” என்று, கோரிக்கை விடுத்து வந்தனர். 

அதன்படி, இந்த கோரிக்கையை, தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு, ஆசிரியர் சங்கங்கள் நேற்று முன் தினம் கோரிக்கையாக அளித்தது.

அதன் படி, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு உயர் நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், “பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்” என்று, கோரி தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு கடிதம் அனுப்பி இருந்தது.

இந்த நிலையில் தான், திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “டிசம்பர் 25 ஆம் தேதி முதல், வரும் ஜனவரி மாதம் 2 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை வழங்கப்படுவதாக” அறிவித்தார்.

அத்துடன், “பள்ளிகளில் நடைபெறும் பாலியல் குற்றசாட்டுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது” என்றும், அவர் தெரிவித்தார்.

மேலும், “மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் பயணிப்பதே தடுக்க பேருந்துகளில் கதவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றும், பள்ளிகளில் இடைவெளியின் போது மாணவர்கள் ஒரே நேரத்தில் கூடுவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது” என்றும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.