இந்த ஆண்டு அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்க வேண்டாம் என்று, பள்ளிக் கல்வித் துறை பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று, ஆசிரியர் சங்கங்கள் பள்ளிக் கல்வித் துறைக்கு கோரிக்கை விடுத்து உள்ளன.

அதாவது, ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக்கு முன்னதாக அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கமாக இருந்து வந்தது. 

அதன்படி, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக விடப்படும் விடுமுறையானது, ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு பண்டிகைக்குப் பிறகு மீண்டும் பள்ளிகள் துவங்கப்படுவது வழக்கமாக இருந்து வந்திருக்கின்றன. இதனால், ஆண்டு தோறும் இந்த அரையாண்டு தேர்வு விடுமுறையானது சுமார் 10 நாட்களுக்கு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமில்லாது, ஆசிரியர்களுக்கும் இருந்து வந்திருக்கிறது.

ஆனால், தற்போது நடப்பு கல்வியாண்டான 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இன்னும் 2 நாட்களில் கிறிஸ்மஸ் பண்டிகை வர உள்ளது.

என்றாலும், “கொரோனா தொற்று காரணமாக, இந்த ஆண்டு தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதாலும், பாடத்திட்டங்கள் முடிக்க முடியாத நிலை இருப்பதாலும், இந்த ஆண்டு அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்க வேண்டாம்” என்று, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி சக ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது.

இந்த செய்தியை கேள்விப்பட்டு கடும் அதிர்ச்சியடைந்த சொந்த ஊர் தாண்டி வெளியூர்களில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், “தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாடுவதற்காக விடுமுறை அறிவிக்க வேண்டும்” என்று, கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, இந்த கோரிக்கையை, தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு, ஆசிரியர் சங்கங்கள் தற்போது கோரிக்கையாக விடுத்து உள்ளன.

அதன் படி, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு உயர் நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், “பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்” என்று, கோரி தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.