தடுப்பூசி செலுத்திகொள்ளாவிட்டால் ஒமிக்ரான் உங்களை கொல்லவும் வாய்ப்பு இருக்கிறது என்று அமெரிக்காவின்  அதிபர் ஜோ பைடன் அந்நாட்டு மக்களை எச்சரித்துள்ளார்.

சீனாவின் வூகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அந்நாட்டை விட மற்ற நாடுகளில் தான் அதிகளவில் பாதிப்புகளை உண்ணடாக்கி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தான் கொரோனா பாதிப்புகள் அதிகம்.

அதிலும் உலக நாடுகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திய நாடாக இருக்கிறது என்றால் அது அமெரிக்கா தான். அங்கு இதுவரையில் 5 கோடியே 12 லட்சத்து 72 ஆயிரத்து 861 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். கொரோனா தொற்றால் 8 லட்சத்து 10 ஆயிரத்து 45 பேர் பலியாகியும் இருக்கின்றனர்.

இப்போது ஒமிக்ரான் தொற்றும் அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வருகிறது. தற்போது அங்கு கொரோனா கண்டறியப்படுகிற 73 சதவீதத்தினருக்கும் அதிகமானோருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. 

joe biden corona virus vaccineஇது அந்த நாட்டு மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அங்கு இன்னும் தடுப்பூசி போடுவதில் படை வீரர்களிடம் கூட தயக்கம் காணப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் இருந்தவாறு அதிபர் ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

“நீங்கள் தடுப்பூசி போட வில்லை என்றால் நீங்கள் (கொரோனா தொற்று) நோய் தாக்குதலுக்கு ஆளாவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. நீங்கள் தொற்று நோய்க்கு ஆளானால் உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் உள்பட மற்றவர்களுக்கு பரப்புவீர்கள். 

நாம் அனைவரும் ஒமிக்ரான் தொற்று பற்றி கவலை கொள்ளத்தான் வேண்டும். ஆனால் பதற்றம் அடையத் தேவையில்லை. ஆனால் தடுப்பூசி போடாத நிலையில், தொற்று ஏற்பட்டால் மருத்துயில் சேர்க்கும் நிலை வரும். மரணம் அடையவும் வாய்ப்பு உள்ளது.

முழுமையாக தடுப்பூசி (2 டோஸ் ) செலுத்தியவர்கள், பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொண்டுள்ளனர். 

இது தீவிர பாதிப்பில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. ஒமிக்ரான் தொற்றைப் பொறுத்தமட்டில் அது எளிதாக பரவுகிறது. முழுமையாக தடுப்பூசி போட்டவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது.

தடுப்பூசி போட்டவர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாக நேரிட்டாலும், அவர்கள் தீவிரமான நோயில் இருந்தும், மரணத்தில் இருந்தும் பாதுகாக்கப்பட்டவர்கள் ஆகிறார்கள். 

இதனால் அனைவரும் கவனத்துடன் இருக்க வேண்டும். உங்கள் தேர்வு, வாழ்க்கைக்கும், மரணத்துக்கும் இடையேயான வித்தியாசமாக இருக்கலாம்” இவ்வாறு அவர் கூறினார்.

joe biden corona vaccineமுன்னாள் அதிபர் ட்ரம்புக்கு தனது உரையின்போது ஜோ பைடன் பாராட்டு தெரிவித்து இருப்பது கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது.

கொரோனா வைரசுக்கு விரைவாக தடுப்பூசி கண்டுபிடித்து, மக்களுக்கு போடத்தொடங்கியதற்காக அவர் ட்ரம்ப் நிர்வாகத்துக்கு பாராட்டு தெரிவித்தார். 

இதுபற்றி அவர் கூறும்போது, “நான் தெளிவாகக்கூறுகிறேன். கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியை பெற்ற முதல் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. இதற்காக நான் முந்தைய நிர்வாகத்துக்கும், (ட்ரம்ப் நிர்வாகம்) அறிவியல் சமூகத்தினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என ஜோ பைடன் குறிப்பிட்டார்.