ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றியதை ரத்து செய்ததை எதிர்த்து அதிமுக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

vedha nilayamமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தை அவரது நினைவு இல்லமாக மாற்றி அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன.

இந்நிலையில் இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி மெரினா கடற்கரையில் ரூ.80 கோடி செலவில் நினைவிடம் கட்டப்பட்டுள்ள நிலையில் மற்றொரு நினைவு இல்லம் அமைக்க தேவையில்லை என்று தெரிவித்தார்.  மேலும் அந்த அரசாணைகளை ரத்து செய்தார். மேலும் வேதா நிலையத்தின் சாவியை தீபா மற்றும் தீபெக்கிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.

மேலும் இதனையடுத்து வேதா இல்லத்தின் சாவி தீபா மற்றும் தீபெக்கிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது அவர்கள் வேதா இல்லத்தில் வசித்து வருகின்றனர். இதற்கிடையில் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றியதை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அதிமுக, ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினர் சி.வி.சண்முகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு ஐகோர்ட்டு நீதிபதிகள் அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. அதில் பொதுநோக்கமின்றி அரசியல் காரணத்திற்காகவே ஜெயலலிதா இல்லம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு இரண்டாவது நினைவிடம் என்பது தேவையற்றது என்ற தனிநீதிபதியின் கருத்தில் தவறில்லை என ஐகோர்ட்டு அமர்வு கருத்து தெரிவித்தது. இதனை தொடர்ந்து ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றியதை ரத்து செய்ததை எதிர்த்து அதிமுக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு அமர்வு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அதிமுக தரப்பில் மேல்முறையீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.