தமிழகத்தில் ஒமைக்ரான் வகை கொரோனா பரவலை தடுக்க, நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகின்றது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

lockdowns

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இரண்டாவத நாளாக அவர் மருத்துவ நிபுணர்கள், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இன்றும் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. குறிப்பாக தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடு, நாளை ஜனவரி 6 முதல் அமலுக்கு வருகிறது. அந்த நேரத்தில் மாநிலத்திற்குள் பொது மற்றும் தனியார் பேருந்து சேவைகள் மட்டும் அனுமதிக்கப்படும் என தெரிகிறது. தொடர்ந்து 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலுக்கு வருகின்றது.

இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். இந்தக் கூட்டத்தில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இது தொடர்பாக சிறிது நேரத்துக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதனால் இனி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவிருக்கிறது. அதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்றுவரும் தடுப்பூசி முகாம் இனி சனிக்கிழமைகளில் நடைபெறும் என்று தெரிவித்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து  நாளை முதல் தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வருவதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மாநிலம் முழுவதும் 6.01.2022 முதல் வார நாள்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும். இந்த நேரத்தில் அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவை செயல்பட அனுமதி இல்லை எனினும் இந்த இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாட்டின் போது பின்வரும் அத்தியாவசிய செயல்பாடுகள் மட்டும் அனுமதிக்கப்படும்.

மேலும் மாநிலத்திற்குள் பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகள், மாநிலங்களுக்கு இடையேயான பொது / தனியார் பேருந்து சேவைகள், அத்தியாவசிய பணிகளான பால் வினியோகம், தினசரி பத்திரிகை வினியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், ஏடிஎம் மையங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேரத்திலும் அனுமதிக்கப்படும். பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.  உற்பத்தி தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப சேவை உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்படலாம். பணிக்குச் செல்லும் பணியாளர்கள் தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். இருப்பினும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்துமாறு தொடர்புடைய நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறது.