கொரோனா கேப்சூல் மாத்திரைகள் விரைவில் விற்பனைக்கு வர உள்ள நிலையில், அதன் விலை 35 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டு உள்ளன.

இந்தியாவில் கொரோனாவின் 3 அலை தொடங்கி விட்டது. இதன் காரணமாகவே, வட மாநிலங்கள் பலவும், தற்போது இரவு நேர ஊரடங்கை அறிவித்து வருகின்றன. இவற்றுடன் பல விதமான கட்டுப்பாடுகளையும் ஒன்றன் பின் ஒன்றாக அறிவித்து வருகின்றன.

இதனை உறுதி செய்யும் வகையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள பல்கலைக்கழகத்தில் கடந்த 4 நாட்களில் 187 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அத்துடன், “கொரோனா 3 வது அலையின் தொடக்கத்தில் இந்தியா உள்ளதாக” நேற்றுகூட,டெல்லியை சேர்ந்த மருத்துவர் ஊடகத்தில் பேசினார்.

இப்படியாக, இந்தியாவில் பரவத் தொடங்கியிருக்கும் கொரோனா பாதிப்புகளை சமாளிக்க மத்திய - மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

என்றாலும், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37 ஆயிரத்து 379 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் தான், “கொரோனா பாதிப்புக்கு உள்ளனவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், கேப்சூல் வடிவிலான மோல்னுபிரவிர் என்ற மாத்திரையை” அமெரிக்காவின் மெர்க் நிறுவனம் தற்போது புதிதாக உருவாக்கி இருக்கிறது.

இந்த மாத்திரையை, இந்தியாவில் டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் தயாரித்து வழங்க, அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு இருக்கிறது.

அதன் படி, இந்தியாவில் இந்த மாத்திரை ஒன்றின் விலையானது 35 ரூபாய் என்று, தற்போது நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. 

அதன்படி, “ஒவ்வொரு கொரோனா நோயாளிக்கு தொடர்ந்து 5 நாட்கள் சிகிச்சைக்காக 40 கேப்சூல்கள் தேவைப்படும் என்றும், அதன்படி, இந்த 40 மாத்திரிகளின் மொத்த விலையானது 1,400 ரூபாய் ஆக இருக்கும்” என்றும், கூறப்படுகிறது.

அந்த வகையில், “இந்த மாத்திரையை குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட 100 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு, டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் உற்பத்தி செய்து, வினியோகம் செய்ய இருப்பதாகவும்” தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதே போல், “இந்தியாவில் மொத்தம் 13 நிறுவனங்கள் இந்த மாத்திரையை உற்பத்தி செய்யும்” என்றும், அந்த நிறுவனம் கூறியுள்ளது.

குறிப்பாக, “இந்த புதிய மாத்திரைகள், அடுத்த வாரம் முதல் இந்தியா முழுவதும் உள்ள மருந்து கடைகளில் கிடைக்கும்” என்றும்,  எதிர்பார்க்கப்படுவதாக அந்த மருந்து தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.