தமிழ் சினிமாவில் முன்னணி அதிரடி ஆக்சன் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அருண் விஜய் நடிப்பில் வரிசையாக அடுத்தடுத்து திரைப்படங்கள் ரிலீசாகியுள்ளன. முன்னதாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த யானை திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

மேலும் அருண் விஜய் குத்துச்சண்டை வீரராக நடித்துள்ள பாக்சர், காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள சீனம், மூடர்கூடம் பட இயக்குனர் நவீன் இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி இணைந்து நடித்துள்ள அக்னிச்சிறகுகள் ஆகிய படங்களும் தொடர்ந்து வெளிவர தயாராகி வருகின்றன.

இதனிடையே சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அருண் விஜய் அவரது மகன் அர்நவ் இணைந்து நடித்துள்ள ஓ மை டாக் திரைப்படம் விரைவில் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளோடு வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நடிகர் அருண் விஜய் விரைவில் குணமடைந்து மீண்டு வர கலாட்டா குழுமம் சார்பில் வேண்டுகிறோம்.