ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைக்கப்படும் கு.சண்முகம், சென்னை மதுரவாயல் தொகுதியில் பத்திரம் எழுதிக் கொடுத்து நூதன முறையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

மெரினா என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு போராட்டம் தான். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு பீட்டா நிறுவனத்தின் அழுத்தத்தினால் தடை விதிக்கப்பட்ட நிலையில், தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மெரினாவில் திரண்டு கிட்டத்தட்ட 20 நாட்களாக போராடி, ஜல்லிக்கட்டிற்கான தடையைத் தகர்த்தெறிந்தனர். தமிழர்களின் இந்த உணர்வுப்பூர்வமான போராட்டம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்ததுடன் தமிழனின் பெருமையை உலகமெங்கும் பறைசாற்றியது. 

இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இருந்து பிறந்தது தான் 'தமிழ்நாடு இளைஞர் கட்சி' எனும் புதிய கட்சி. அரை நூற்றாண்டாகத் தமிழகத்தைத் திராவிட கட்சிகள் ஆட்சி செய்திட நேர்மைக்கே அடையாளமாய் திகழும் சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்களை தலைமையாய் ஏற்றுக் கொண்ட இந்த தமிழ்நாடு இளைஞர் கட்சி புதிய குழந்தையாய் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது. 

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சென்னையின் மதுரவாயல் தொகுதியில் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் கு.சண்முகம் போட்டியிடுகிறார். தமிழ்நாடு இளைஞர் கட்சிக்குத் தேர்தல் ஆணையம் ஒதுக்கிய சின்னம் 'மோதிரம்' ஆகும். சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழ்நாடு இளைஞர் கட்சி மற்றவர்களைக் காட்டிலும் சற்று வித்தியாசமாகவே திகழ்கின்றனர். 

பல ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆட்சி செய்த முன்னணி கட்சிகள் இலவசங்களைக் கூறி வாக்குறுதி சேகரித்து வரும் சூழலில் தமிழ்நாடு இளைஞர் கட்சியோ வெற்றிபெறுவதற்கு முன்னதாக தொகுதி மக்களுக்குப் பத்திரம் எழுதிக் கொடுத்து வாக்கு சேகரிக்கின்றனர்.

முன்னதாக ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குப் பிறகு தமிழ்நாடு இளைஞர் கட்சி செய்த நன்மைகளை தற்போது பார்க்கலாம். அதன் படி, கடந்த 4 ஆண்டுகளில்.. 

-  9 தெருக்களுக்கு மழைநீர் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
- மதுரவாயல் தொகுதியில் 80க்கும் மேற்பட்ட பழுதடைந்த மின்கம்பங்கள் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- ஆலப்பாக்கம் ஸ்ரீ தேவிக்குப்பம் இராதா அவென்யூ சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
- கர்ப்பிணி பெண்கள் அமரும் பழுதடைந்த இருக்கைகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- 148 வது வட்டத்தில் தெரு பெயர் பலகை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது
என்று, தொகுதி மக்களின் அடிப்படைத் தேவையை உணர்ந்து தமிழ்நாடு இளைஞர் கட்சி பல நல்ல திட்டங்களைச் செய்து உள்ளதாக, அக்கட்சியின் உறுப்பினர்கள் கூறுகிறார்கள்.

அதே போல், இனி தொகுதிக்கு தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் போட்டியிடும் சண்முகம் செய்ய உள்ள திட்டங்களை வாக்குறுதியாகப் பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளதை தற்போது பார்க்கலாம்..

- சென்னை மதுரவாயல் தொகுதியில் பட்டா இல்லாத வீடுகளுக்குப் பட்டா பெற்றுத் தரப்படும்.
- அயப்பாக்கம், அடையாளம்பட்டு, வானகரம் ஊராட்சிகளை மாநகராட்சியில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 
- சட்டமன்ற உறுப்பினருக்கு வருடம் தோறும் அளிக்கப்படும் மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியை மக்கள் நலனுக்கு உரிய முறையில் செலவு செய்யப்படும்.
- லஞ்சம், ஊழல் இல்லாமல் ஆண்டுதோறும் எனது சொத்து மதிப்பு சமர்ப்பிக்கப்படும்.
- தினம் ஒரு பகுதிக்கு நேரில் சென்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அதனை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

“மேற்கண்ட இந்த வாக்குறுதிகளை 3 ஆண்டுகளில் நான் செய்யத் தவறினால், எனது பதவியை ராஜினாமா செய்வேன்” என்று, பத்திரத்தில் குறிப்பிட்டு சண்முகம் கையெழுத்திட்டு உள்ளார். 

பதவிக்கு வருவதற்கு முன்னதாகவே மக்கள் நலப்பணி செய்து பலருக்கு உதவி வரும் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் போட்டியிடும் சண்முகத்திற்கு வாக்களித்தால் மதுரவாயல் தொகுதி வளம்பெறும் என்றும், அவர் சார்பில் பல இளைஞர்களும் களத்தில் இறங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

“காரணம், நாங்கள் அனைவரும் தன்னலமற்றவர்கள். ஊழலற்ற ஒருவரைத் தலைமையாகக் கொண்டவர்கள் என்பதே எங்களின் அடையாளம்” என்றும், தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மோதிரம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருவது பலரது கவனத்தையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.