11 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமியை அண்ணன் மற்றும் 77 வயது முதியவர் உட்பட 3 பேர் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்ததில், அந்த சிறுமி கர்ப்பம் அடைந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்து உள்ள ஈச்சங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், தாய் - தந்தை இறந்த நிலையில் தனது பெரியம்மா வீட்டில் வளர்ந்து வருகிறார்.

இந்த சிறுமி, அங்குள்ள ஒரு அரசுப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

அத்துடன், இந்த சிறுமி, பத்தாம் வகுப்பு வரை விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான அங்குள்ள ஈச்சங்குப்பம் கிராமத்தில் உள்ள தனது பெரியம்மாவின் வீட்டிற்கு அந்த சிறுமி வந்திருக்கிறார்.

பின்னர், பெரியம்மா வீட்டில் இருந்த படியே, அதே ஊரில் உள்ள பள்ளியில் அந்த சிறுமி 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். 

இந்த சூழலில் தான், அந்த சிறுமிக்கு திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து, அந்த சிறுமியின் பெரியம்மா அந்த சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்ளார். 

அங்கு, சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், “சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக” கூறி உள்ளனர்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெரியம்மா, அங்குள்ள செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்து உள்ளார். 

இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த செஞ்சி அனைத்து மகளிர் போலீசார், சிறுமியிடம் தீவிரமாக விசாரணை நடத்தி உள்ளனர்.

அப்போது, அந்த சிறுமி அதிர்ச்சிக்கரமான தகவல்களை கூறி உள்ளார். 

அதாவது, “16 வயது சிறுமியான இந்த பள்ளி மாணவியின் பெரியம்மா மகன் 32 வயதான மோகன், அதே கிராமத்தை சேர்ந்த 77 வயதான முதியவர் மண்ணாங்கட்டி என்கிற வெங்கடேசன், 28 வயதான இளையராஜா, ஆகிய 3 பேரும், மாறி மாறி இந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது” விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. 

இதனையடுத்து, அந்த 3 பேரையும் கைது செய்த போலீசார், 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

குறிப்பாக, அந்த 16 வயது சிறுமிக்கு அந்த கிராமத்தைச் சேர்ந்த 10 க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து பாலியல் தொல்லை கொடுத்தாகவும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

இதனால், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, செஞ்சி காவல் நிலையத்திற்கு சென்று 2 மணி நேரத்துக்கு மேலாக தீவிரமாக விசாரணை நடத்தி உள்ளார். 

மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவராஜ், செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நள்ளிரவில் தீவிர விசாரணை மேற்கொண்டார்.

காவல் உயர் அதிகாரிகள் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அடுத்தடுத்த விசாரணை மேற்கொண்டதால், செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையம் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.

முக்கியமாக, 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த கிராமத்தைச் சேர்ந்த மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என்றும், போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.