பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 13-ம் தேதி வரை 16 ஆயிரத்து 768 பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

pngal festival

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், கொரோனா தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை, சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2 ஆயிரத்து 100 பஸ்களுடன், 4 ஆயிரம் சிறப்பு பஸ்கள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 10 ஆயிரத்து 300 பஸ்களும், பிற ஊர்களிலிருந்து அதே 3 நாட்களுக்கு 6 ஆயிரத்து 468 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 16 ஆயிரத்து 768 பஸ்கள் இயக்கப்படும் தெரிவிக்கப்பட்டது.

சென்னை மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிபூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை செல்லும் பஸ்கள் மற்றும் ஆந்திர மாநிலம் செல்லும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். கே.கே.நகர் பஸ் நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பஸ்கள், தாம்பரம் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பஸ்கள், தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பஸ்கள் மற்றும் போளூர், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

அதனைத்தொடர்ந்து பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சீபுரம், செய்யாறு, ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி செல்லும் பஸ்கள், கோயம்பேட்டில் உள்ள பஸ் நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம், திருவனந்தபுரம் மற்றும் பெங்களூரு செல்லும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் இன்று தினசரி இயக்கப்படும் பஸ்கள் 2 ஆயிரத்து 100 சென்னையில் இருந்து 420 சிறப்பு பஸ்கள் பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து 1,145 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 12-ம் தேதி தினசரி இயக்கப்படும் 2 ஆயிரத்து 100 பஸ்கள், சென்னையில் இருந்து 1,660 சிறப்பு பஸ்கள், பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து 2 ஆயிரத்து 145 பஸ்களும், 13-ந்தேதி (நாளை மறுதினம்) தினசரி இயக்கப்படும் 2 ஆயிரத்து 100 பஸ்கள், சென்னையில் இருந்து 1,920 சிறப்பு பஸ்கள், பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து 3 ஆயிரத்து 178 பஸ்களும் இயக்கப்பட உள்ளன. இன்று முதல் 3 நாட்களுக்கு, தினசரி இயக்கப்படும் 6 ஆயிரத்து 300 பஸ்கள், 10 ஆயிரத்து 468 சிறப்பு பஸ்கள் என ஆக மொத்தம் 16 ஆயிரத்து 768 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் முன்பதிவு செய்துள்ள பஸ்கள் கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து புறப்பட்டு பூந்தமல்லி, நாசரத்பேட்டை, வெளிச்சுற்றுச்சாலை வழியாக வண்டலூர் சென்றடைந்து, ஊரப்பாக்கம் தற்காலிக பஸ் நிறுத்தத்துக்கு சென்று, தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரிலிருந்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருக்கழுகுன்றம்-செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர்-செங்கல்பட்டு வழியாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கோயம்பேடு பஸ் நிலையத்தில் 10 முன்பதிவு மையங்களும், தாம்பரம் சானடோரியம் மெப்ஸ் பஸ் நிலையத்தில் 1 முன்பதிவு மையமும் என மொத்தம் 11 முன்பதிவு மையங்கள் செயல்படுகின்றன.

மேலும் பஸ்களின் இயக்கம் குறித்து அறிந்துகொள்வதற்கும், இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் ஏதுவாக, 9445014450, 9445014436 ஆகிய தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். மேலும் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800425 6151, 044-24749002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். கோயம்பேடு பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும் என்று போக்குவரத்துத்துறை வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.