பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

babri masjid

பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி இடிக்கப்பட்டது. மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் இருந்ததாகவும், அது ராமர் பிறந்த இடமாக இருந்தது என்றும் கூறப்பட்டது. இதனால் ஒன்று திரண்ட ஆர்.எஸ்.எஸ் மற்றும் பல்வேறு இந்து அமைப்பினர் பாபர் மசூதியை இடித்து தள்ளினர். இந்த சம்பவம்  நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் பலர் கொல்லப்பட்டனர். 

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6-ம் தேதி வந்துவிட்டால் நாடு முழுவதும் பதற்றம் தொற்றிக் கொள்கிறது. மீண்டும் ஒரு இந்து - இஸ்லாமியர் பிரச்சினை வந்துவிடக் கூடாது என்று மத்திய, மாநில அரசுகள் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகின்றன. பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தை இஸ்லாமிய அமைப்புகள் கருப்பு தினமாக அனுசரித்து வருவதையொட்டி என்று டெல்லி, மும்பை, அயோத்தி, மதுரா உள்ளிட்ட நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் முக்கிய இடங்களில் அசம்பாவிதங்கள் நடப்பதைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் காவல் துறையினர்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வாரம் கண்ணன் பிறந்த ஜென்ம பூமியான மதுராவில் கண்ணன் பிறந்த இடத்தில் மசூதி ஒன்று இருப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்து இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தியதால் பதற்றம் உருவானது. இந்நிலையில் மதுராவில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க என்று போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நகருக்குள் வரும் வாகனங்களை தீவிரமாக சோதனையிட்டு வருகின்றனர்.

அதனைத்தொடர்ந்து பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள், முக்கிய கோவில்கள், வணிக வளாகங்கள், அரசு அலுவலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்கும் பொருட்டு போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பணியில் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர். மாநில, மாவட்ட எல்லையோர பகுதிகள் மற்றும் சோதனை சாவடிகளில் உஷார்நிலையில் இருக்கவும், ரோந்து பணியில் ஈடுபடவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல் கேரளா சபரிமலையில் பம்பை முதல் சன்னிதானம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்புப்படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்னர். சில இடங்களில்  சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு போலீசார் காண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.