தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவராகவும் நடிகராகவும் வலம் வருபவர் இயக்குனர் அமீர். கடைசியாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான வடசென்னை திரைப்படத்தில் ராஜன் என்னும் கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி பலரது பாராட்டுக்களைப் பெற்ற இயக்குனர் அமீர் தொடர்ந்து நடிகராக களமிறங்கும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று (டிசம்பர் 5)வெளியிட்டார்.

இயக்குனர் அமீரின், அமீர் பிலிம் கார்ப்பரேஷன் மற்றும் தயாரிப்பாளர் ஜாஃபரின் JSM பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் புதிய திரைப்படத்தின் Photo Shoot இன்று (டிசம்பர் 5) நடைப்பெற்றது. இப்படத்தில் இயக்குனர் அமீர் மற்றும் நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா கதாநாயகர்களாக நடிக்க சஞ்சிதா ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும் வின்சென்ட் அசோகன், தீனா, சரண் மற்றும் “தயா” செந்தில்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க,  அதர்மம் மற்றும் பகைவன் ஆகிய படங்களின் இயக்குனர் ரமேஷ்கிருஷ்ணன் இயக்கும் இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவில், கவிஞர் சினேகன் பாடல்களை எழுத, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப்பிறகு இயக்குனர்களுடன் இணைந்து யுவன் ஷங்கர் ராஜா, ராம்ஜி மற்றும் சினேகன் ஆகியோர் இணைந்திருப்பது படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது. விரைவில் அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.