தமிழ் திரையுலகின் மிக முக்கிய நடிகரான சத்யராஜ் அவர்கள் கதாநாயகனாக வில்லனாக குணச்சித்திர நடிகராக என எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் தனக்கே உரித்தான பாணியில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்விப்பதோடு இதயங்களிலும் இடம் பிடித்தவர்.

முன்னதாக சசிகுமார் மற்றும் சத்யராஜ் இணைந்து நடித்த எம்ஜிஆர் மகன் திரைப்படம் கடந்த தீபாவளி ரிலீஸாக நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியானது. மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சத்யராஜ். 

அடுத்ததாக ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பில், மாயா மற்றும் கேம் ஓவர் படங்களை இயக்கிய இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் மீண்டும் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் கனெக்ட் திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் நடிகர் சத்யராஜின் தங்கை கல்பனா மன்றாடியார் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். 

சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கல்பனா மன்றாடியார் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 66 வயதில் உயிரிழந்துள்ள கல்பனா மன்றாடியாரின் இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன. நடிகர் சத்யராஜின் தங்கை கல்பனா மன்றாடியார் மறைவுக்கு கலாட்டா நிறுவனமும், திரையுலகமும், ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.