"மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலையில் இதுவரை எந்த சந்தேகமும் இல்லை" என சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாச்சலம். தமிழக வனத்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக கடந்த அ.தி.மு. ஆட்சியில் நியமிக்கப்பட்டார். 

இந்த சூழலில் கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி வெங்கடாசலம் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 

இந்த சோதனையில் 13 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப் பணமும், 11 கிலோ தங்கமும், 4 கிலோ வெள்ளி பொருட்கள், 15 கிலோ சந்தன மரக்கட்டைகள் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து  மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக சுப்ரியா சாஹூவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் மீது தமிழ்நாடு வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது.  சட்டவிரோதமாக சந்தன மரக்கட்டைகளை வைத்திருந்ததாக வெங்கடாசலம் மீது வனத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். 

commissioner chennai

தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஊழல் மற்றும் சொத்து சேர்ப்பில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பிலும் வெங்கடாசலம் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் சென்னை வேளச்சேரியில் மனைவியுடன் வசித்து வந்த வெங்கடாச்சலத்துக்கும் மனைவிக்கும், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்குப் பின் அவ்வப்போது சிறு சச்சரவுகள் தோன்றியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சென்னை வேளச்சேரியில்  தலைமை செயலக காலனியில் உள்ள தனது வீட்டில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாச்சலம் கடந்த 2 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். 

ஊழல், சொத்து சேர்ப்பு வழக்கில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் வெங்கடாச்சலம் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  வெங்கடாச்சலம் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

வெங்கடாச்சலம் மிரட்டப்பட்டாரா என்பதை அறிய அவரது செல்ஃபோனை சைபர் பிரிவு ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரம் வேறு திசையில் செல்வதை அடுத்து சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இதுகுறித்து பேட்டி அளித்தார்.

சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள காவல் ஆணையரகத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்: 

"மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர்  வெங்கடாசலம் தற்கொலை மரணம் 2 ஆம் தேதி நடந்துள்ளது. அன்று மதியம் 12 மணிக்கு மேல் உணவருந்தியுள்ளார். 3 மணிக்கு அறைக்குள் சென்று பார்த்துள்ளனர். 

கதவை திறக்காததால் ஆட்களை வரவழைத்து 4 மணிக்கு கதவை உடைத்து உள்ளேச்சென்று பார்த்தபோது உள்ளே தூக்கில் தொங்கியது தெரிய வந்தது.

commissioner chennai corporation

தற்போது சட்டப்பிரிவு 174-ன் படி வழக்கு பதியப்பட்டுள்ளது. வெங்கடாசலம் தற்கொலையில் இதுவரை கிடைத்த  வாக்குமூலத்தின்படி அவரது மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை. கைப்பற்றப்பட்ட அவரது செல்ஃபோன், டேப் தொடர்பாக தடயவியல் துறையின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம். 

உடற் கூறு ஆய்வு அறிக்கை கிடைத்தப் பிறகு தேவைப்பட்டால் கூடுதலாக சட்டப் பிரிவுகளை சேர்ப்பது குறித்து முடிவு செய்யப்படும். விசாரணையில் கிடைக்கும் தகவலை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்.

விஜிலென்ஸ் சார்பாக  வெங்கடாசலத்திற்கு சம்மன் அனுப்பியதாக எங்களது தரப்பில் எந்த தகவலும் இல்லை. எப்போது விசாரணைக்கு வர முடியும் என்று அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விஜிலென்ஸ் அதிகாரிகள்  பேசியுள்ளனர் என்றே தெரியவந்துள்ளது. 

மிரட்டல் என்று எந்த தகவலும் இல்லை. அவர் மனைவி புகார் அளித்துள்ளார். அதை அவர் வாக்குமூலத்தை அப்படியே பதிவு செய்துள்ளோம். அதில் அவர் சந்தேகம் இருக்கிறது என்று எதுவும் புகார் அளிக்கவில்லை.

மறைந்த முன்னாள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி நல்லம நாயுடு வீட்டை உடைத்து 7 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது  தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.  அதிமுக அலுவலகம் உட்பட பொது இடத்தில் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கவும் ,  சட்டம் ஒழுங்கு பாதுகாக்கவும் , காவல்முறை சார்பில் உரிய பாதுகாப்பு வழங்கப்படும். 

அதிமுக அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக நேற்று ஒரு புகார் வந்தது. அந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ளோம்” இவ்வாறு அவர் கூறினார்.