மாறி மாறி ஆட்சி செய்தும் அதிமுக, திமுக அரசுகள் சென்னையை காப்பாற்றவில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

vijayakanth

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, இரண்டு நாள் மழைக்கே சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மழைநீரில் தத்தளித்து கொண்டு இருக்கிறது. சிங்கார சென்னை என அழைக்கப்படும் மாநகரம், 2 நாட்களில் சாதாரண மழைக்கே மூழ்கிவிட்டது.


அதிமுக மற்றும் திமுக அரசுகள் முன்னேற்பாடுகள் செய்யாததுதான்,சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட காரணம் என்றும் சென்னையில் 2015ல் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு பிறகாவது மாநில அரசு தகுந்த முன்னேற்பாடுகளை செய்திருக்க வேண்டும். ஆனால் மாறி மாறி ஆட்சி செய்து வரும் அதிமுக, திமுகவும் சென்னையில் மழைநீர் தேங்காதவாறு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை, சென்னையின் பல்வேறு இடங்களில் மழை நீர் வடிகால்கள் இல்லாததால் அனைத்து இடங்களும் கடல் போல் காட்சியளிக்கின்றன என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.  


மேலும், மழை நீருடன் கழியுநீர் கலந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துள்ளதால் சென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 50 ஆண்டுகளாக மழை வெள்ளத்தில் சிக்கி தவிப்பதாகவும், ஆண்ட கட்சியும், தற்போது ஆளும் கட்சியும் இதுவரை ஆட்சி செய்தும், அதே அவலநியை தான் நீடிப்பதாக பொதுமக்களே புகார் தெரிவிக்கும் நிலை இன்றும் நீடிக்கிறது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.

சென்னையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டி இந்த அறிக்கை வெளியிடுகிறேன். தொடர் மழையால் பல பகுதிகளில் அணைகள், ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கரையோரம் வசித்து வரும் மக்களை அப்புறப்படுத்தி, அவர்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என தெரிவித்தார் .

மேலும் அவர்களுக்கு தேவையான உணவு மருத்துவம் போன்ற வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மழைக்காலங்களில் டெங்கு, மலேரியா போன்ற கொசுக்களால் பரவும் நோய்கள் மற்றும் காலரா போன்ற பிற நோய்கள் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.அதனால் நோய் பரவாமல் தடுப்பதற்கு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

இதையடுத்து கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேமுதிக தொண்டர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு நிவாரணப் பணிகளை செய்ய வேண்டும். பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பாய், போர்வை மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் என்று இவ்வாறு தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனரும், பொதுச் செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.