தொடர் கனமழை எதிரொலியாக சென்னையை சுற்றி உள்ள எரிகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருவதால், வெள்ள அபாய எச்சரிக்கை உள்ளதாக கூறப்படுகிறதுஃ

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வட கிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி முதல் தொடங்கி கன மழை பெய்து வருகிறது. அன்று முதல் தற்போது வரை தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை பெய்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.

முக்கியமாக, சென்னையில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்கு பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் மழை நீர் தேங்கி ஆறாக ஓடுகிறது.

சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், திருநீர்மலை, சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம், சிட்லப்பாக்கம், பீர்க்கன்காரணை, பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையும் பெய்து வருகிறது.

மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கொசஸ்தலை வடிநில கோட்டத்தில் உள்ள ஏரிகளில் 58 ஏரிகள் 100 சதவிகிதம் நிரம்பியுள்ளது. 
அத்துடன், 37 ஏரிகள் 76 சதவிகிதமும், 50 ஏரிகள் 51 சதவிகிதமும், 107 ஏரிகள் 50 சதவிகிதமும், 79 ஏரிகள் 25 சதவிகிதமும் நிரம்பி உள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அத்துடன், பூண்டி நீர்தேக்கத்தில் மொத்த உயரமான 35 அடியில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதாகவும், அங்கு நீர்மட்டம் 33 .98 அடியாக உயர்ந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் மொத்த கொள்ளளவான 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி நீரில் தற்போது, 2 ஆயிரத்து 786 மில்லியன் கனஅடி நீர் நிரம்பி இருக்கிறது. இவற்றுடன், அங்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 244 கன அடியாக வந்துகொண்டிருக்கிறது. இதனால், அங்கு 4 ஆயிரத்து 883 கனஅடி நீர் திறந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

அதே போல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 138 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. அங்குள்ள 88 ஏரிகள் 70 சதவீதத்துக்கு மேலும், 48 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும் நிரம்பி உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவான 23.3 அடி நிரம்பிய நிலையில், அங்கிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக, அங்குள்ள கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதனால், அங்கு மொத்த கொள்ளளவான 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடியில் தற்போது 2 ஆயிரத்து 942 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

அங்கு, நீர்வரத்து விநாடிக்கு 710 கன அடியாக உள்ள நிலையில், ஏரியிலிருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 144 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரியில் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக, அந்த ஏரியை சுற்றி உள்ள  21 கிராமங்களுக்கு  வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது.

குறிப்பாக, சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரி, அதன் மொத்த உயரமான 21.20 அடியில், தற்போது 19.52 அடியாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

இதன் மொத்த கொள்ளளவான 3 ஆயிரத்து 300 மில்லியன் கனஅடி நீரில், தற்போது 2 ஆயிரத்து 916 கனஅடி நீர் இருப்பாக உயர்ந்திருக்கிறது. அங்கு நீர்வரத்து விநாடிக்கு ஆயிரத்து 357 கனஅடியாக உள்ள நிலையில், 2 ஆயிரம் கன அடி நீர் தொடர்ச்சியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

அதே போல், சோழவரம் ஏரியில், அதன் மொத்த உயரமான 18.86 அடியில் தற்போது, 18 அடியாக உயர்ந்து இருக்கிறது.

இந்த ஏரியின் மொத்த கொள்ளளவான ஆயிரத்து 81 மில்லியன் கனஅடியில், 908 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருக்கிறது. நீர்வரத்து வினாடிக்கு 520 கன அடியாக உள்ள நிலையில், ஆயிரத்து 200 கனஅடி நீர் அங்கு திறந்துவிடப்பட்டு உள்ளது.

இதனால், சென்னையை சுற்றியிலும் உள்ள ஏரிகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருவதால், சென்னை பகுதியின் கரையோர மக்கள் சற்று பாதுகாப்ப இருக்க படி அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.