பருவமழையின்போது சீரான மின்விநியோகத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.


வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதனால்  மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.குறிப்பாக, சென்னையில் கடந்த 2 நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மேலும், சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். 

senthilbalajiசென்னையில் நேற்று முன் தினம் இரவு தொடங்கிய மழை விடிய விடிய பெய்ததை அடுத்து சாலை எங்கிலும் வெள்ள நீர் தேங்கியது. இதனால் சென்னையே வெள்ளக்காடாக காட்சி அளித்தது. மேலும் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் மக்களை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைப்பதற்கு ஏதுவாக சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை 24 மணி நேரமும் திறந்து வைக்க தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்யவும், மின் கசிவு ஏற்படாத வகையில் பார்த்து கொள்ளவும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் பெய்து வரும் கனமழையால் ஒரு சில பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது. மின்கசிவால் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்கவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்சாரம் நிறுத்தப்பட்டது குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசுகையில், சென்னையில் பெய்து வரும் கனமழையால் மின்மாற்றிகளுக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை. சென்னையில் பெரும்பாலும் அனைத்து பகுதிகளுக்கும் மின்விநியோகம் தங்கு தடையின்றி வழங்கப்பட்டுள்ளது. அதுபோன்ற சூழல் ஏற்படக்கூடாது என முன்னெச்சரிகை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், கனமழையால் மின் கம்பங்கள் சேதமடைந்தால் உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுள்ளது. ஒரு லட்சம் மின் கம்பங்கள் தயாராக உள்ளன.

சென்னையில் 0.27 சதவிகிதம் பகுதிகளுக்கு மட்டுமே மின்சாரம் தடைபட்டுள்ளதாகவும் மேற்கு மாம்பலம், வள்ளுவர் கோட்டம், புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தொடர் மழையினால் ட்ரான்ஸ்பார்மர்கள் ஏதும் சேதமடையவில்லை என்றும் மின்சாரம் தாக்கி யாரும் உயிரிழக்கவில்லை என்றும் தெரிவித்தார். மழைநீர் வடிந்த பிறகு அந்தப் பகுதிகளில் மின் இணைப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் மின்சாரம் தொடர்பாக பாதிப்பு ஏதும் இருந்தால் 9498794987 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். 

சென்னையில் ஒரு துணை மின் நிலையத்தில் மட்டுமே மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. பருவமழையின் போது சீரான மின் விநியோகத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.