சென்னையில் தொடர்ந்து 2 வது நாளாக பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ள நிலையில், தி.நகர் உள்ள மேட்லி சுரங்கப்பாதை முழுவதுமாக தண்ணீரில் மூழ்கி குட்டித் தீவாக காட்சி அளிக்கிறது. 

சென்னையில் கடந்த 2 நாட்களுக்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கி வருவதால், சென்னையின் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி ஆறாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

சென்னையின் முக்கிய இடங்களில் வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், சென்னை மாநகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. சென்னையின் முக்கிய சாலைகளில் எல்லாம் மழை நீர் வெள்ளம் போல் காட்சி அளித்து ஓடுகிறது. இதனால், சாலைகளில் செல்ல முடியாமல் வாகனங்கள் பலவும் நீரில் ஊர்ந்து சென்று வருகின்றன.

இந்த நிலையில் சென்னையில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று 2 வது நாளாக நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.
இந்த ஆய்வின் போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளையும் முதலமைச்சர் செய்து வருகிறார். அடிப்படி வசதிகளையும் உடனடியாக செய்துகொடுக்க அதிகரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

முக்கியமாக, சென்னையில் இரவு முழுவதும் விட்டு விட்டு பெய்த கன மழையால் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் மழை நீர் வடிவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

அதிலும் குறிப்பாக, சென்னையில் உள்ள பல்வேறு சுரங்கப்பாதைகளில் மழைநீர் சூழ்ந்ததால், அங்கு போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால், அந்த பகுதிகளில் மோட்டார் மூலம் தேங்கி உள்ள தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கைளை மீட்பு பணியின்ர் மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, சென்னை தி. நகரில் இருக்கும் பிரதான சுரங்கப்பாதையான மேட்லி சுரங்கப்பாதையானது, முற்றிலுமாக மழை நீரால் மூழ்கிப்போய் உள்ளது. இதனால், மேட்லி சுரங்கப்பாதை முழுவதுமாக தண்ணீரில் மூழ்கி குட்டித் தீவாக காட்சி அளிக்கிறது. 

இதனையடுத்து, அங்கிருந்து மழை நீரை வெளியேற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தொடர் மழையால் அங்கு கிட்டத்தட்ட 30 அடி அளவில் தண்ணீர் தேங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

மேலும், அந்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. இவற்றுடன் தி.நகர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால், தி.நகர் பார்ப்பதற்கே குட்டித் தீவு போல் காட்சி அளித்துக்கொண்டு இருக்கிறது.

இதன் காரணமாக, “சென்னையில் உள்ள முக்கியமான 6 சுரங்கப்பாதைகள் கன மழை காரணமாக மூடப்பட்டுள்ளதாக” சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்து உள்ளது. 

அதன்படி, “தி.நகர் துரைசாமி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, கங்குரெட்டி சுரங்கப்பாதை, வியாசர்பாடி சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை மற்றும் வில்லிவாக்கம் சுரங்கப்பாதை ஆகிய முக்கியமான 6 சுரங்கப்பாதைகள் மூடப்படுவதாக” போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.