திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் மின்கம்பி மீது தூக்கி வீசப்பட்ட இளைஞர் உட்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை பெருங்குடி விமான நிலையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் 20 வயதான காமராஜ் மற்றும் அஜித் கண்ணன். நண்பர்களான இவர்கள் இருவரும் திருப்பூரிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். இந்தநிலையில்,  காமராஜ் மற்றும் அஜித் கண்ணன், தங்களது நண்பர்கள் 8 பேருடன் சேர்ந்து தீபாவளி விடுமுறை கழிக்கலாம் என்று நினைத்தனர். 

அதன்படி, ஐந்து இருசக்கர வாகனங்களில்,  காமராஜ் மற்றும் அஜித் கண்ணன், தங்களது நண்பர்கள் 8 பேருடன் தீபாவளி விடுமுறையைக் கழிக்க கொடைக்கானலுக்குச் சுற்றுலா சென்றனர். பின்னர் விடுமுறை தினம் முடிந்ததால், நண்பர்கள் அனைவரும்  மதியம் மதுரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த சிலுக்குவார்பட்டி அருகே, சிவன் கோயில் பகுதியல் ஒருவர் பின் ஒருவராக இருசக்கர வாகனங்களில் காமராஜ் மற்றும் அஜித் கண்ணன், தங்களது நண்பர்களுடன் திரும்பி வந்துகொண்டிருந்தனர். 

a2

அப்போது, எதிரே சிவகங்கையிலிருந்து பண்ணைக்காடு நோக்கி கார் ஒன்று அதிவேகமாக வந்துகொண்டிருந்தது. அந்த நேரத்தில், காமராஜ் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் நிலை தடுமாறி எதிரே வந்த கார் மீது மோதியது.  இதில் பேலன்ஸ்  செய்ய முடியாமல், இருசக்கர வாகனம் காருக்கு மேலே பறந்து சென்று யாரும் எதிர்பாரதவிதமாக கீழே விழுந்தது. 

அதில், காமராஜ் சாலையில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் பின்னே அமர்ந்திருந்த அஜித் கண்ணன், கார் மோதிய வேகத்தில் தூக்கியடிக்கப்பட்டு சாலையின் குறுக்கே உயரமாக சென்ற மின்கம்பத்தில் சிக்கி உயிரிழந்தார்.

அஜித் கண்ணனின் உடல் மின்கம்பத்திலேயே தொங்கிக்கொண்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரின் நண்பர்கள், நண்பர்களை பறிகொடுத்ததால் கதறி அழுதனர். தகவலறிந்து வந்த நிலக்கோட்டை காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

a4

பின்னர் காமராஜ் மற்றும் அஜித் கண்ணன் ஆகிய இருவரின் உடல்களையும் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், சிவகங்கையைச் சேர்ந்த கார் ஓட்டுநரான 50 வயைதைச் சேர்ந்த தர்மராஜை) கைதுசெய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தீபாவளி விடுமுறைக்கு சென்ற நண்பர்கள், இருசக்கர வாகனத்தில்  நண்பர்கள் கண்முன்னே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயரமான மின்னழுத்த கம்பியில் இளைஞர் தூக்கியடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.