இந்திய திரை உலகின் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்ததாக மலையாளத்தில் மோகன்லாலின் அரபிகடலின்டே சிம்ஹம், தெலுங்கில் மகேஷ்பாபுவின் சர்க்காரு வாரி பாட்டா மற்றும் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கும் சாணி காயிதம் உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகின்றன.

முன்னதாக இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த அண்ணாத்த திரைப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி வெளியீடாக திரையரங்குகளில் வெளியானது. இதனை அடுத்து நவம்பர் 26 ஆம் தேதி ரிலீஸாகிறது கீர்த்தி சுரேஷின் குட் லக் சகி திரைப்படம்.

இயக்குனர் நாகேஷ் குக்குன்னூர் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள குட் லக் சகி திரைப்படத்தில் நடிகர்கள் ஜெகபதி பாபு மற்றும் ஆதி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வொர்த் எ ஷாட் மோஷன் ஆர்ட்ஸ் தயாரிப்பில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் வெளியிடும் குட் லக் சகி படத்திற்கு சிரத்தன் தாஸ் ஒளிப்பதிவு செய்ய, தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். 

படத்திற்கு படம் வித்தியாசமான கதைக் களங்களையும் நல்ல கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் கீர்த்தி சுரேஷின் சேட்டையான நடிப்பில் வெளிவரவிருக்கும் குட் லக் சகி திரைப்படத்திலிருந்து பேட் லக் சகி எனும் கலகலப்பான பாடல் வீடியோ தற்போது வெளியானது. இப்பாடல் வீடியோவை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.