“நடிகர் விஜய் சேதுபதியை எட்டி உதைப்பவருக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும்” என்று, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அறிவித்திருப்பது பெரும் சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நடிகர் விஜய் சேதுபதி, பெங்களூருக்கு சென்றிருந்தார். 

அப்போது, அங்குள்ள கெம்பெகவுடா விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியையும் அவரது உதவியாளரையும் அங்கிருந்த ஒருவர், தாக்க முற்படுவது போன்ற  வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வைரலாகி தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த வீடியோவில், “நடிகர் விஜய் சேதுபதியின் உதவியாளரை எட்டி உதைத்த அந்த மர்ம நபர், பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவமதிக்கும் விதமாக விஜய் சேதுபதி பேசியதற்கு தான் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அதனால் விஜய்சேதுபதி தரப்பினர் தன்னை தாக்கியதாகவும் பதிலுக்கு தான் விமான நிலையத்தில் அவரை தாக்க முற்பட்டதாகவும்” பேசியதாக செய்திகள் வெளியானது. 

ஆனால், பின்னர் பெங்களூர் போலீசார் இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் போது, “அந்த நபர் விஜய்சேதுபதியை எட்டி உதைக்கவில்லை என்றும்,   விஜய் சேதுபதியுடன் வந்தவரைத் தான் எட்டி உதைத்து தாக்கினார்” என்றும், விளக்கம் அளித்தினர்.

“பசும்பொன் முத்துராமலிங்க தேவரை நடிகர் விஜய் சேதுபதி அவதூறாக பேசியதாக” தகவல் ஒன்று வெளியாகி, சமூக வலைத்தளங்களில் பெரும் விவாத பொருளாக மாறியது. இதற்கு, விஜய் சேதுபதி தரப்பில் எந்த விளக்கமும் அப்போது அளிக்கப்படவில்லை.

இதனால், சாதி சர்சையில் நடிகர் விஜய் சேதுபதி சிக்கி தவித்து வருகிறார்.

அதாவது, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை அவமதித்து பேசியதாக விஜய் சேதுபதி மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில், “அவர் அதற்கு மன்னிப்பு கேட்காததால், அவர் மன்னிப்பு கேட்கும் வரைக்கும் அவரை எட்டி உதைப்பவர்களுக்கு ஒரு உதைக்கு ஆயிரத்தி ஒரு ரூபாய் சன்மானம் வழங்கப்படும்” என்று, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

இது, இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி நிலையில், பலரையும் முகம் சூளிக்க வைத்தது. அத்துடன், அர்ஜுன் சம்பத்தின் இந்த டிவிட்டர் பதிவானது, இணையத்தில் பெரும் விவாத பொருளாகவும் மாறியது.

இதனையடுத்து, நடிகர் விஜய் சேதிபதி தரப்பில் இருந்து விளக்கம் வெளியானது. 

அதில், “பெங்களூர் விமானத்தில் நிலைதவறிய நிலையில் ஒருவர், என்னை அணுகினார். நான் பிறகு பேசலாம் என்றேன். ஆனால், 'நீ என்  ஜாதிதான பேசுப்பா, நானும் நடிகந்தான்' என்பது போல சத்தமாக கேட்டப்படி வந்தார். மற்றபடி அவர் காணொளியில் சொல்வது போல தேசியத்தையும் தெய்வீகத்தையும் அதே சமயம் தமிழர்களையும் தன் உயிராக கருதி வாழ்ந்த தெய்வத்திருமகனார் பசும்பொன் அய்யா குறித்து நான் எதுவும் பேசவில்லை.  அவர் (மகா காந்தி) நிலையறிந்து மன்னித்தேன். நான் ரசிகர்களிடம் எப்படி நடந்து கொள்வேன் என்பதை நாடறியும். தொடர்ந்து அவதூறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளேன்” என்று, நடிகர் விஜய் சேதிபதி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆனாலும், நடிகர் விஜய் சேதிபதி தரப்பில் இருந்து விளக்கம் வெளியான பிறகும், அர்ஜூன் சம்பத் தனது அறிவிப்பை மட்டும் இதுவரை வாபஸ் வாங்காமல் இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதும், மீண்டும் புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.